UPDATED : ஜன 27, 2012 12:00 AM
ADDED : ஜன 27, 2012 10:38 AM
சென்னை: பெண் விஞ்ஞானிகளுக்கான, "வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் இளம் பெண் விஞ்ஞானி விருது" சென்னை அறிவியல் விழாவில், வழங்கப்பட உள்ளது.
உயர்கல்வித் துறையை சார்ந்த, "அறிவியல் நகரம்" சார்பில், "சென்னை அறிவியல் விழா&' ஜனவரி 27 துவங்கி, வரும் 30ம் தேதி வரை, சென்னை, கோட்டூர்புரம், அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளியில் நடக்கிறது.
சுகாதாரம், ஆற்றல், சுற்றுச்சூழல், கால்நடை அறிவியல் மற்றும் அடிப்படை அறிவியல் ஆகியவற்றை மையமாக கொண்டு நடத்தப்படும் இவ்விழாவில், "அன்றாட வாழ்வில் அறிவியல்" எனும் தலைப்பில் கண்காட்சி, பிரபல விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களின் விரிவுரை மற்றும் கலந்துரையாடல் இடம் பெறும்.
இதையொட்டி, 2010ம் ஆண்டிற்கான, தமிழக அரசின் பெண் விஞ்ஞானிக்கான வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு, அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த விஞ்ஞானி கங்கா ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை உதவி பேராசிரியர் மரகதம், அண்ணாமலை பல்கலை உதவி பேராசிரியர் மலர்விழி, பெரம்பலூர், வேப்பந்தட்டை, பருத்தி ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் செரினி ஜெனிதா ராஜம்மாள், பெரியார் பல்கலை உதவி பேராசிரியர் பூங்கொடி விஜயகுமார், அழகப்பா பல்கலை உதவி பேராசிரியர் பாண்டிமா தேவி, அண்ணா பல்கலை உதவி பேராசிரியர் விமலா மணிவாசகன் மற்றும் சவீதா பல்கலை மூத்த விரிவுரையாளர் உதயலட்சுமி ஆகியோர், இளம் பெண் விஞ்ஞானி விருதை பெறுகின்றனர்.
பாராட்டுச் சான்றிதழ் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசும் கொண்ட இவ்விருதுகளை, தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், வழங்குகிறார். இத்தகவல் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
