தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்
தனியார் நர்சிங் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர்
UPDATED : ஜன 28, 2012 12:00 AM
ADDED : ஜன 28, 2012 11:50 AM
திருநெல்வேலி: தமிழகத்தில் அரசு நர்சிங் கல்லூரி மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படாத சூழ்நிலை இருந்தது. அரசு நர்சிங் கல்லூரி மாணவிகள் மட்டுமே இந்த வேலைவாய்ப்பை பெற்று வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. மேலும், மருத்துவ துறையில் பல்வேறு பணியிடங்கள் எழுத்து தேர்வு மூலம் நிரப்பபடும் என்றும், இதற்கென தனி வாரியம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அரசின் இந்த அறிவிப்புக்கு அரசு நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு போராட்டங்களையும் நடத்துகின்றனர். இதற்கிடையில் அரசு நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு போட்டியாக தற்போது தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளும் களத்தில் குதித்துள்ளனர். தனியார் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க கூடாது என்று தெரிவிக்கும் அரசு நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை பாளை டக்கரம்மாள்புரம், வள்ளியூர், காவல்கிணறு, ஆலங்குளம், வீ.கே புதூர், சங்கரன்கோவில் பருவக்குடி, சேரன்மகாதேவி, இடையன்குடி ஆகிய 8 இடங்களில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அங்கு பாளை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ் தலைமையில் போலீசாரும் குவிக்கப்பட்டனர்.
இப்போராட்டம் தொடர்பாக மாணவிகள் சிலர் கூறியதாவது: தனியார் நர்சிங் கல்லுரிகளில் படித்தாலும் அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் இதற்கு அரசு நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை ஏற்று கொள்ள முடியாது.
நாங்களும் அவர்களை போல படித்தாலும் எங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு கிடைக்காத சூழ்நிலை இருந்தது. இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் குறைந்த சம்பளத்திற்கு பணி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அரசின் புதிய அறிவிப்பின் மூலம் நாங்களும் அரசு வேலைக்கு வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக தனியாக எழுத்து தேர்வு நடத்துவதால் திறமையானவர்கள் அரசு வேலைவாய்ப்புக்கு வர வாய்ப்பு உள்ளது.
எனவே, அரசு இந்த அறிவிப்பை திரும்ப பெறாமல் உடனடியாக எழுத்து தேர்வு நடத்தி தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகளையும் அரசு வேலைவாய்ப்புக்கு தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
