UPDATED : ஜன 30, 2012 12:00 AM
ADDED : ஜன 30, 2012 10:11 AM
தமிழகத்தில் முன்மாதிரியாக ஓசூரில் பள்ளியை விட்டு இடைநிற்கும் மாணவிகளுக்கு சிறப்பு இல்லம் அமைக்கப்படும், என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி தெரிவித்தார்.
பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலத்தில் கலெக்டர் மகேஷ்வரன் தலைமையில் நடந்தது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் முனுசாமி பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்படும் நான்கு கஸ்தூரிபா காந்தி பாலிகா உண்டு உறைவிடப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மட்டும் மாணவ, மாணவிகள் படிக்க முடிகிறது. இங்கு எட்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் மேற்படிப்பு படிக்க வசதியில்லாமல் மீண்டும் பள்ளியை விட்டு நிற்கும் வாய்ப்புள்ளது.
அதனால் குடும்ப வறுமையால் துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியை விட்டு இடைநிற்கும் மாணவர்களுக்காக தமிழகத்தில் முன்மாதிரி திட்டமாக ஓசூரில் முதற்கட்டமாக சிறப்பு 100 மாணவிகள் தங்கி படிக்கும் வகையில் சிறப்பு இல்லம் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கு படிக்கும் மாணவிகளுக்கு ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் செலவை தொழில் அதிபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை ஏற்க செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
