கலைக் கல்லூரிகளில் ‘பட்டய படிப்பு’ அமைச்சர் பொன்முடி தகவல்
கலைக் கல்லூரிகளில் ‘பட்டய படிப்பு’ அமைச்சர் பொன்முடி தகவல்
UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
விழுப்புரம் அரசு கல்லூரியில் நடந்த கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் திறப்பு விழாவில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசியதாவது:
தமிழகத்தில் வரும் 30ம் தேதி 540 விரிவுரையாளர்கள் பணிக்கான உத்தரவு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் படித்து முடித்த பின் வேலை வாய்ப்பு பெறும் வகையில் பட்டப் படிப்புடன், தொழில் சார்ந்த ஒரு ‘பட்டய படிப்பு’ துவங்கலாமா என்பது குறித்து தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்களை அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.
கலைக் கல்லூரிகளில் ‘பட்டயப் படிப்பை’ கட்டாயமாக்கலாமா அல்லது விருப்ப பாடமாக கொண்டு வரலாமா என ஆலோசித்து வருகிறோம். பட்டய படிப்பு படிக்க விரும்பும் மாணவர்கள் சான்றிதழ் ஏதும் கொடுக்க தேவையில்லை. மாணவர்கள் அந்தந்த கல்லூரியில் படிப்பதற்கு ஆதாரமாக முதல்வரிடம் சான்றிதழ் பெற்று கொடுத்தால் போதும்.
இதன் மூலம் பி.ஏ., வரலாறு படிக்கும் ஒரு மாணவர் பட்டய படிப்பாக (சர்டிபிகேட் கோர்ஸ்) கம்ப்யூட்டர், ஏ.சி., மெக்கானிக் இதர தொழில் சார்ந்த படிப்பு படிக்கலாம்.
கல்லூரி படிப்பை முடித்த பின் அவர்களால் இத்தகைய படிப்பை படிக்க இயலாது. எனவே படிக்கும் காலத்திலேயே மாணவர்கள் ஏதாவது ஒரு தொழிற் கல்வியையும் கற்றுக் கொள்ள வேண்டும். இந்த மாணவர்களுக்கு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்வு நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் பொன்முடி பேசினார்.
