UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஐதராபாத்: போலி கல்வி சான்றிதழ் தயாரித்த சூடான் நாட்டைச் சேர்ந்த இருவர் உட்பட எட்டுபேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து, ஐதராபாத் போலீஸ் இணை கமிஷனர் கமலாசன்ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:
சூடான் நாட்டை சேர்ந்த சபாரி எல்பாரி என்ற வாலிபர், மாணவர் விசா மூலம் கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தார். அவரது விசா காலம் முடிந்த பின்னரும், சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்து, சூடான், எத்தியோப்பியா,யேமன் மற்றும் சோமாலியா நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு போலியான கல்வி சான்றிதழ்களை தயாரித்து வழங்கி வந்துள்ளார்.
இவரிடமிருந்து, அப்துல் நயிம் என்பவர், சுற்றுலா பயணியாக கடந்த 2006 மற்றும் 2008ம் ஆண்டுகளில் இரண்டு முறை இந்தியாவிற்கு வந்து விட்டு, ராஜஸ்தானில் உள்ள வித்யாபீடத்தில், பி .டெக் இன்ஜினியரிங் படித்தது போன்ற போலியான சான்றிதழை ரூ.70 ஆயிரம் செலுத்தி பெற்றுக் கொண்டது தெரியவந்துள்ளது.
தூதரக அலுவலர்கள் தங்களுக்கு பண்டல்கண்ட் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்திருந்த சான்றிதழ்களை உ.பியில் <உள்ள ஜான்சி பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியபோது, இந்த விவகாரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. இதன் அடிப்படையில், குற்றவாளிகளைப் பிடிக்க போலீசார் உஷார் படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சபாரி எல்பாரி, வெளிநாட்டு மாணவர்களுக்கு போலியான கல்லூரி சேர்க்கை கடிதம், கல்விச் சான்றிதழ் மற்றும் ஐதராபாத்தில் தங்கியிருக்க அனுமதி ஆகியவற்றை தயாரித்து பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
இந்த போலி சான்றிதழ்கள், ராய்ப்பூர், சேலம், உதய்பூர், ஜான்சி பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதில், இளங்கலை பட்டப்படிப்பில், தோல்வி கண்ட மாணவர்களிடம் இருந்து ரூ.35 ஆயிரமும், முதுகலைப் பட்டப்படிப்பில் தோல்வியடைந்த மாணவர்களிடமிருந்து ரூ.80 ஆயிரம் பெற்றுக் கொண்டு தேர்ச்சி பெற்றது போன்ற போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த வழக்கு தொடர்பாக, முக்கிய குற்றவாளியான மொகலாய கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முகமதுதௌசீப், சூடான் நாட்டை சேர்ந்த சபாரி எல்பாரி, அப்துல்மானியிம் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 500க்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்கள், ஐந்து ரப்பர் ஸ்டாம்புகள், இரண்டு கம்ப்யூட்டர்கள், இரண்டு பாஸ்போர்ட்டுகள், ஒரு மொபைல் போன் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
