மாநில மொழிகளில் சேவையை துவக்க பி.பி.ஓ., நிறுவனங்கள் திட்டம்
மாநில மொழிகளில் சேவையை துவக்க பி.பி.ஓ., நிறுவனங்கள் திட்டம்
UPDATED : செப் 26, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சூரத், பிதார், புதுச்சேரி, ராஞ்சி, ரெய்பூர், பாட்னா, கொச்சி, ஹாஸன் போன்ற குறுநகரங்களிலும் பி.பி.ஓ. நிறுவனங்கள் செயல்பட துவங்கியுள்ளன.
இதுதவிர மெட்ரோ நகரங்களிலுள்ள பி.பி.ஓ., நிறுவனங்கள் வெவ்வேறு மாநிலங்களிலுள்ள கலாசார அமைப்புகளையும், குழுமங்களையும் பண்டிகைக் காலத்தை ஒட்டி நாடத் துவங்கியுள்ளன. வாடிக்கையாளர்களுக்கு அவர்களது மொழியிலேயே சிறந்த சேவையைத் தருவதே இதன் நோக்கம்.
ஏஜிஸ் நிறுவனத்தின் சிக்ஷா திட்டத்தின் மூலமாக குஜராத்தி, மராத்தி, போஜ்பூரி, பஞ்சாபி, தெலுங்கு, தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறப்பாகப் பேசும் பயிற்சிகள் தரப்படுகின்றன. இந்தியாவின் மொழி வேறுபாடுகளை நன்கு உணர்ந்து அந்தந்த மொழிகளில் உச்சரிப்பு, எழுத்துப் பிழை, பொருள் ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தி இந்தப் பயிற்சிகள் தரப்படவுள்ளன.
பொதுவாக சர்வதேச பி.பி.ஓ. நிறுவனங்களில் வட்டார உச்சரிப்புகள் கடுமையாக மறுக்கப்படும். ஆனால் இந்தியாவிலுள்ள பி.பி.ஓ. நிறுவனங்களே இவற்றை வரவேற்கின்றன. உதாரணமாக 16 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றும் ஏஜிஸ் நிறுவனத்தில் மாநில மொழிகளில் பயிற்சியாளர்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இத்தகைய பயிற்சிகளைத் தருவதற்காக பல்வேறு மனிதவியலாளர்களையும், மொழியியலாளர்களையும் பணியிலமர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மனிதவியலாளர்கள் வரலாறு, கலாசாரம், மாநிலம் தொடர்புடைய பண்டிகைகளைப் பற்றி பயிற்சியளிக்கிறார்கள்.
மொழியியலாளர்கள் குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழியை நளினமாகவும், நயமாகவும் பேசுவதில் பயிற்சி தருகிறார்கள். தற்சமயம் 14 மாநில மொழிகளில் நடத்தப்படும் பி.பி.ஓ. பயிற்சிகள் விரைவில் நாட்டின் சிறு மற்றும் குறு நகரங்களை எட்டவிருக்கிறது.
இவை தவிர டில்லியிலுள்ள சர்ச்சுகளில் நடத்தப்படும் ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்கள் டில்லியின் சி.ஆர்.பார்க்கில் அசாமிய மற்றும் பெங்காலி மொழி பேசுபவர்களை ஈர்ப்பது, டில்லியின் ஆர்.கே.புரம் பகுதியில் வசிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு பேசுபவர்களை கவருவது போன்ற முறைகளிலும் மேலும் தற்போது பி.பி.ஓவில் பணியிலிருப்பவர்கள் பரிந்துரைப்பவர்களை பணிக்கு எடுத்துக் கொள்வது போன்ற முறைகளின் மூலமாக மாநில மொழிகளில் திறன் பெற்றவர்கள் துறைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் 22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்டிருப்பதும் ஒவ்வொரு மொழியும் அந்தந்த மாநிலத்திற்குள்ளேயே மாறுபடுவதும் இத்துறைக்கு தற்போது சவாலாக உள்ளது. சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ், நெல்லைத் தமிழ், கோவைத் தமிழ் என தமிழ்நாட்டிற்குள்ளேயே மொழி மாறுபடுவதை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.
அபரிமிதமான வேகத்தில் வளரும் வங்கித் துறை, இன்சூரன்ஸ், தொலைத் தொடர்பு, ஆட்டோமொபைல், சுகாதாரம் ஆகிய துறைகளில் பி.பி.ஓவின் மாநில மொழி சார்ந்த வளர்ச்சி இன்றியமையாததாக உணரப்படுகிறது.
12 ஆயிரத்து 500 ஊழியர்களைக் கொண்டுள்ள இன்போஸ்விஷன் நிறுவனம் புதிய ஊழியர்களை பணியிலமர்த்த மாநில மொழியுடன் ஆங்கிலம் அல்லது இந்தி அறிந்திருப்பதை கட்டாயமாக்கியுள்ளது. இந்த நிறுவனம் 16 நகரங்களிலும் கொச்சி, புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களிலும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
நவராத்திரி, துர்கா பூஜை போன்ற பண்டிகைகளை ஒட்டி பல்வேறு மாநிலங்களிலிருந்து மெட்ரோ நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ள மக்களை மெட்ரோ நகரங்களிலுள்ள பி.பி.ஓக்கள் ஓரளவு பயன்படுத்திக் கொள்கின்றன.
அமெரிக்கப் பொருளாதாரத்தின் மந்தமான நிலையிலும் கூட இந்திய பி.பி.ஓ. துறை படுவேகமாக வளர்ந்து வருகிறது. இத்துறைக்கான முதலீட்டுத் தேவை குறைவு என்பதாலும் அன்னிய நிறுவனங்களுக்கு நிகராக இந்திய நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதாலும் துறையில் திறனாளர்களுக்கான தேவை அதிமாகவே காணப்படுகிறது.
மாநில மொழிகளிலும் கவனம் செலுத்தும் போது, இந்திய பி.பி.ஓ. நிறுவனங்கள் சிறு நகரங்களை எட்டும் நாள் தூரத்தில் இல்லை என்றே கூறலாம். பி.பி.ஓ. கனவுகளை நிரப்பி வேலை தேடும் நம்மூர் இளைஞர்களுக்கு இது நல்ல செய்திதான்.
