‘கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து வரும் மாநிலங்கள்’
‘கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து வரும் மாநிலங்கள்’
UPDATED : அக் 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழகம், கர்நாடகா, கேரளா உட்பட சில மாநிலங்களில் கல்வி வசதிகள் மேம்பட்டு இருந்தாலும், கல்விக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது.
மாநில அரசுகள் கல்வி மேம்பாட்டிற்காக தங்கள் பட்ஜெட்டில் போதிய நிதியை ஒதுக்கி வருகிறது. என்ன தான் வளர்ச்சி திட்டங்கள், பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், மக்கள் எந்த அளவு கல்வி அறிவு பெற்றிருக்கின்றனர்; எழுத்தறிவு பெற்றவர் எத்தனை பேர் என்பது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அளவுகோலாக எடுத்து கொள்ளப்படுகிறது.
அந்த வகையில் கல்வி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியானது முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு மாநிலமும் இந்த விஷயத்தில் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பது பற்றி பிஎச்டி சேம்பர் ஆய்வு ஒன்றை நடத்தியது.
கடந்த 12 ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, மாநில அரசுகள் கல்விக்கான ஒதுக்கீட்டை 2 சதவீதம் குறைந்துள்ளன. குறிப்பாக மாநிலங்களில் சமீபத்தில் நடந்த தேர்தலின் போது அரசியல் கட்சிகள் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இலவச அரிசி, இலவச மின்சாரம், போன்றவற்றிற்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனவே தவிர, சமூக முன்னேற்றத்திற்கு தேவையான கல்வி கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு அக்கறை காட்டவில்லை என கவலை தெரிவித்துள்ளது.
கடந்த 1995-96ம் ஆண்டு மாநிலங்கள் மொத்த செலவீனத்தில் கல்விக்காக 20 சதவீதம் செலவழித்தன. 2007-08ம் ஆண்டில் அது 18 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர் ஒருவருக்கான கல்வி ஒதுக்கீடு அடிப்படையில் 2005-06ம் ஆண்டு உ.பி., மற்றும் பீகார் அரசுகள் 483 ரூபாயும், மகாராஷ்டிரா மற்றும் கேரள அரசு 1,034 ரூபாயும், இமாச்சல பிரதேம் 1,777 ரூபாயும் செலவிட்டுள்ளன.
கல்விக்கான ஒதுக்கீடு குறைவு காரணமாக ஆரம்ப கல்வி மற்றும் மேல்நிலைப் பள்ளி அளவில் போதுமான அளவில் கட்டடங்கள் கட்டப்படவில்லை. இதனால், போதுமான அரசு பள்ளிகள் கிராமப்புறங்களில் உருவாகவில்லை.
மேலும், நல்ல பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான மக்கள் தனியார் கல்வி நிலையங்களை தேடி செல்ல வேண்டியதாகிவிட்டது.
கல்வி அறிவு பெற்ற மக்கள் அதிகம் வசிக்கக் கூடிய மாநிலமான கேரளாவிலும் கல்விக்கான ஒதுக்கீடு குறைந்துள்ளது. இதேபோல் சமீப ஆண்டுகளாக கல்வி வசதியில் மேம்பாடு அடைந்துள்ள தமிழகம் மற்றும் கர்நாடகாவிலும் கல்வி ஒதுக்கீட்டில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
கல்விக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசுகள் அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, வசதிகளை மேலும் விரிவுபடுத்தினால் தான் நல்லதொரு ஆரோக்கியமான சூழ்நிலை உருவாகும், என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
