லோக்சபா தேர்தலுக்காக பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமில்லை
லோக்சபா தேர்தலுக்காக பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமில்லை
UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என்ற கூறப்பட்டது.
மார்ச் மாதத்திற்கு முன்னதாகவோ அல்லது ஏப்ரல் இறுதியில் இருந்தோ துவங்கி தேர்வுகள் நடைபெறலாம் என்றும் பேசப்படுகிறது. தேர்வை நடத்தக்கூடிய துறையை பொறுத்தவரை, இதுவரை தெளிவாக எந்தவித கருத்தையும் தெரிவிக்காமல் இருந்து வந்தது.
இந்நிலையில், ‘பள்ளி பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும்’ என்பதை தேர்வுத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை இயக்குனர் அக். 15ம் தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:
வரும் மார்ச் மாதம் பிளஸ் 2 மற்றும் அதைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. அதற்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. கல்வி மாவட்ட வாரியாக, பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்களின் பெயர் பட்டியல்கள் பெறப்பட்டு வருகின்றன.
தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி படிவங்கள் வாயிலாக இந்த விவரங்கள் பெறப்படுகின்றன. மாணவர்கள் பெயர் பட்டியலை பெற்று, கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் மையத்தில் அதை ஒப்படைக்க வேண்டும். அதற்குப் பின் விவரங்களை சரி பார்க்க, மீண்டும் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு பெயர் பட்டியல் அனுப்பப்படும். அந்தப் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அதை மேற்கொள்ளவும் தலைமை ஆசிரியர்களுக்கு கால அவகாசம் தரப்பட்டுள்ளது.
பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியர்களைச் சந்தித்து, தங்களது பிள்ளைகளின் பெயர், பிறந்த தேதி, ‘இனிஷியல்’ உள்ளிட்ட விவரங்கள் பிழையின்றி இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். திருத்தங்கள் இருந்தால், அது குறித்து தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்து உரிய மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகள் வெளியான பின், சான்றிதழ்களில் திருத்தம் செய்யக்கோரி தேர்வுத்துறையை பெற்றோர் அணுகுகின்றனர். அதை தவிர்க்கும் வகையில், முன்கூட்டியே இந்த சரிபார்ப்பு பணிகளை மேற்கொள்ளலாம். சான்றிதழ்களில் சரியான விவரங்கள் இடம் பெற இது பயன் தரும். இவ்வாறு இயக்குனர் கூறியுள்ளார்.
