விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் அலட்சியம்: துணைவேந்தர் வருத்தம்
விடைத்தாள் திருத்துவதில் ஆசிரியர்கள் அலட்சியம்: துணைவேந்தர் வருத்தம்
UPDATED : அக் 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: பொறியியல் மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் போதிய கவனத்துடன் ஈடுபடுவதில்லை என, சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் வருத்தம் தெரிவித்தார்.
‘விடைத்தாள் திருத்தும் பணிக்கு மூத்த ஆசிரியர்களை அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்படும்’ என் றும் அவர் தெரிவித்தார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில், தனியார் பொறியியல் கல்லூரிகளின் நிர்வாகிகள் கூட்டம் அக். 15ம் தேதி நடந்தது.
கூட்டத்தில் சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் பேசியதாவது:
பொறியியல் கல்லூரிகள் வளர, அவற்றுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி தேவை. கல்லூரி முதல்வர்களுக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் கல்வி நன்றாக இருக்கும். சில கல்லூரிகளில் புதிதாக சேரும் ஆசிரியர்களுக்கு 6,000 ரூபாய், அனுபவமுள்ள ஆசிரியர்களுக்கு 8,000 ரூபாய் சம்பளமாக வழங்குகின்றனர்.
தேர்வுகளில் பலவிதமான பிரச்னைகள் உள்ளன. ஆசிரியர்கள் 3.30 மணி நேரத்தில் 25 விடைத்தாள்களை திருத்துவதற்கு பதிலாக, இவற்றை 1.15 மணி நேரத்தில் திருத்தி முடித்து விடுகின்றனர். இந்த ஆண்டு மறுமதிப்பீட்டிற்கு 8,000 பேர் விண்ணப்பித்தனர். கல்லூரிகள், விடைத்தாள் திருத்தும் பணிக்கு மூத்த ஆசிரியர்களை அனுப்புவதில்லை.
இனி, மூத்த ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தும் பணிக்கு அனுப்பாத கல்லூரிகளின் தேர்வு முடிவுகள் நிறுத்தப்படும். சம்பந்தப்பட்ட கல்லூரிகளிடம் விளக்கம் கேட்ட பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
கல்லூரிகள் ஒவ்வொரு மாதத்திற்கான மாணவர்களின் வருகைப் பதிவை, அடுத்த மாதம் 5ம் தேதிக்குள் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பாத கல்லூரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
கேள்வித்தாள் முறைகேட்டை தவிர்க்க, 2008ம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு அடுத்த ஆண்டிலிருந்து ஆன்-லைன் மூலம் கேள்வித்தாள் அனுப்பும் முறை அறிமுகப்படுத்தப்படும். இதன்படி, தேர்வு மையங்களில் 30 நிமிடத் திற்கு முன் கேள்வித்தாள்களை ஆன்-லைன் மூலம் பெற்று, நகல் எடுத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு மன்னர் ஜவகர் பேசினார்.
