முதுகலை, தொழில்கல்வி தகுதியை பதிவு செய்ய மதுரையில் வசதி
முதுகலை, தொழில்கல்வி தகுதியை பதிவு செய்ய மதுரையில் வசதி
UPDATED : அக் 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மதுரை: மதுரை வேலைவாய்ப்பு மையத்திலேயே இனி முதுகலை மற்றும் தொழில்கல்வி தகுதியை பதிவு செய்யலாம்.
இதுவரை முதுகலை மற்றும் தொழிற்கல்வி பட்டதாரிகள் சென்னையில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்ய வேண்டும். இதனால் தென்மாவட்டத்தினர் சிரமப்பட்டனர்.
தற்போது இந்த அலுவலகத்தின் கிளை மதுரையில் துவக்கப்பட்டுள்ளது. மதுரை கே.புதூரில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மாடியில் இந்த அலுவலகம் செயல்படுகிறது. இதனை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கமிஷனர் ஏ.எஸ்.ஜீவரத்தினம் அக். 16ம் தேதி துவக்கி வைத்தார். இணைஇயக்குனர் ஜெயச்சந்திரன், உதவிஇயக்குனர்கள் பிச்சம்மாள், ஜான்பிலிப்போஸ் கலந்து கொண்டனர். முதல் நாளில் 100 பேர் வரை புதுப்பித்தல், பதிவை மேற்கொண்டனர்.
இந்த அலுவலகத்தின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, கோவை, நீலகிரி, கரூர், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்கள் வருகின்றன.
சென்னை அலுவலகத்தில் பதிவு செய்திருந்த தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 252 பேரின் பதிவு விபரங்கள் இந்த அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இனி அவர்கள் இந்த அலுவலகத்தில் பதிவை புதுப்பிக்கலாம். புதிய பதிவுதாரர்கள், கூடுதல் கல்வித் தகுதியை பதிவு செய்வோர் இனி சென்னைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
