அழியும் சிட்டுக்குருவி இனம்: மாணவர்களின் ஆய்விற்கு சர்வதேச விருது
அழியும் சிட்டுக்குருவி இனம்: மாணவர்களின் ஆய்விற்கு சர்வதேச விருது
UPDATED : அக் 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
உலக நடைமுறைக்கேற்ப பள்ளிகளிலும் மாணவர்களின் சமூக பார்வை விசாலமாகி வருகிறது. கல்லூரிகளில் நடத்தப்படும் ஆய்வை பள்ளி மாணவர்களும் கையாளத் துவங்கியுள்ளனர். சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மாணவர்களின் ஆய்வும் அதை மையமாக வைத்தே செய்யப்படுகிறது.
சிட்டுக்குருவி பற்றி ஆய்வு:
மதுரை பீபிகுளம் ரோட்டரி லஹாரி மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், அழிந்து வரும் பறவையினத்தில் சிட்டுக்குருவி குறித்து ஆய்வு நடத்தியுள்ளனர். பிளஸ் 2 மாணவர்கள் ஆர். பிரசன்னஆர்த்தி, கே.கிருஷ்ணா, கே.நாகராஜன், எஸ்.பார்கவி, ஆர்.மதுஸ்வேதா இந்த ஆய்வை நடத்தினர். இதற்கு அமெரிக்காவின் ‘டீன்ஸ் பார் பிளானட் எர்த்’ என்ற அமைப்பின் வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
ஆய்வில் கண்ட உண்மை:
மாணவர்களின் ஆய்வில் கூறியிருப்பதாவது: ‘காமன் ஹவுஸ் ஸ்பேரோ’ எனப்படும் சிட்டுக்குருவியின் விலங்கியல் பெயர் ‘பாஸ்டர் டொமஸ்டிகஸ்’. மிகவும் சென்சிடிவ் பறவையான இது தானியங்களையே விரும்பித் தின்னும். புழு, சிறிய பூச்சிகளையும் உண்ணும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் கூட்டம், கூட்டமாக பறக்கும் சிட்டுக் குருவிகளை தற்போது காணமுடியவில்லை. கிராமப்புறங்களில், வயல்வெளிகளில் மட்டுமே தற்போது காணப்படுகின்றன.
உலக வெப்பமயமாதலால் நகர்ப்பகுதிகளில் இவை அரிதாகி வருகின்றன. விளைநிலங்கள் குறைவது, தானியங்கள் கிடைக்காதது, நகர்மயமாதலால் கூரைவீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாறுவதும் முக்கிய காரணங்களாகும். மின்வயர்கள், மொபைல் டவர்கள் மூலம் வெளிப்படும் அதிர்வலைகளும் இதுபோன்ற சிறிய பறவையினங்களை பாதிக்கின்றன. அதிக இரைச்சலைக்கூட தாங்க இயலாத இவ்வகை இனங்கள் வாகன இரைச்சல், ஹார்ன் சத்தம் போன்றவற்றாலும் பாதிக்கப்படுகின்றன.
கிராமப்புற வயல்வெளியில் பாதுகாப்பான கருவேலங்காடுகள், அகன்ற இலையுடன் அடர்ந்து வளரும் பூவரசு மரங்களில் விரும்பி கூடுகட்டும். அங்கும் வயல்வெளிகளில் பூச்சி மருந்து, ரசாயன உரங்கள் கலந்த உணவு, நீரை குடிப்பதால் இவ்வகை பறவைகள் அதிகளவு வாழ முடியவில்லை. அதேசமயம் காகங்களோ எந்தச் சூழ்நிலையிலும் வசிக்கும் தன்மையை பெற்றுள்ளன.
புத்திசாலிப் பறவைகளான இவை தானியங்களைவிட, மாமிசத்தையும் உண்பவையாக இருப்பதால் பாதிப்பு இன்றி உள்ளதாக தெரியவந்துள்ளது. சிட்டுக்குருவிகள் அழியாமல் தடுக்க வருங்காலங்களில் தானிய கிடங்குகளை அமைக்க வேண்டும். முருங்கைப் பூ போன்றவற்றை இவை உணவாக கொள்வதால் அவை அதிகம் கிடைக்க வேண்டும்.
இதுபோன்ற கண்டுபிடிப்புகளை அவர்களின் ‘புராஜெக்டில்’ மாணவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த ஆய்வு குறித்து அமெரிக்க அமைப்புக்கு இணையதளம் மூலம் கட்டுரை சமர்ப்பித்தனர். அந்த அமைப்பு மூன்றாவது பரிசிற்கு இக்கட்டுரையை தேர்வு செய்துள்ளது. முன்னதாக சில சந்தேகங்கள், வினாக்களை பள்ளி மாணவர்களிடம் கேட்க, அவற்றுக்கும் இவர்கள் இணையதளம் மூலமே பதிலளித்தனர்.
மாணவர்களின் ஆர்வம்:
பள்ளி முதல்வர் கே.எம்.அழகேசன் கூறியதாவது: தியாகராஜர் கல்லூரியில் நடந்த கருத்தரங்கில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். அங்கு கோவை ‘அவுட்ரீச்’ அமைப்பின் (அமெரிக்காவை அடித்தளமாக கொண்டது) சார்பில் கலந்துகொண்ட பேராசிரியர் டேனியல், எங்கள் பள்ளி மாணவர்களின் ஆர்வம் கண்டு அழிந்து வரும் பறவையினம் குறித்து பேசினார்.
மாணவர்கள் ‘சிட்டுக்குருவி’ யை தேர்ந்தெடுத்தனர். விலங்கியல் ஆசிரியர் ஆனந்த் வழிகாட்டுதல்படி மதுரை நகரில் சிம்மக்கல், ஆரப்பாளையம், அழகர்கோயில், காரியாபட்டி, சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற பகுதிகளை களமாக கொண்டு ஆய்வை நடத்தினர். இவ்வாறு அவர் கூறினார். நாகரீக முன்னேற்றம் நகரை விட்டே ஒரு பறவை இனத்தை துரத்தி விட்டது.
