தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புற்றீசல்போல் பெருகும் ஆசிரியர் பயிற்சி பள்ளி: தடுக்க மாநில அரசு திட்டம்

புற்றீசல்போல் பெருகும் ஆசிரியர் பயிற்சி பள்ளி: தடுக்க மாநில அரசு திட்டம்

புற்றீசல்போல் பெருகும் ஆசிரியர் பயிற்சி பள்ளி: தடுக்க மாநில அரசு திட்டம்


UPDATED : அக் 24, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆசிரியர் படிப்பை நடத்துவதற்காக தனியார் பள்ளிகள் அங்கீகாரம் கேட்டால் தர வேண்டாம் என்று, ஆசிரியர் கல்விக்கான தேசிய குழுமத்திற்கு இந்த மாநிலங்கள் கண்டிப்பாக தெரிவித்துள்ளன. இதேபோன்ற முடிவை தமிழக அரசும் விரைவில் எடுக்க உள்ளது.
அரசு வேலை வாய்ப்புகளில் ஆசிரியர் பணிக்கு மட்டும் ஆண்டுதோறும் கணிசமான அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால், ஆசிரியர் பயிற்சியை பெறுவதற்கு மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் ஏராளமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அளவுக்கு அதிகமாக ஆசிரியர் பயிற்சி நிலையங்கள் முளைக்கும்போது, அவற்றோடு சேர்த்து போலி பள்ளிகளும் தோன்றிவிடுகின்றன. மேலும், அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பயிற்சி படிப்பை படிப்பதால், அவர்களுக்கு உடனுக்குடன் வேலை வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளால் மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, அரியானா, ஆந்திரா போன்ற மாநிலங்கள், ‘குறிப்பிட்ட ஆசிரியர் பயிற்சிப் படிப்புகளுக்கு இனி புதிதாக அங்கீகாரம் தர வேண்டாம்’ என்று, என்.சி.டி.இ.,க்கு கண்டிப்புடன் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர அரசு, டி.இ.டி., (டிப்ளமா இன் டீச்சர் எஜுகேஷன்) படிப்பிற்கு அங்கீகாரம் தர வேண்டாம் என்று கூறியுள்ளது. பி.எட்., படிப்பு வேண்டாம் என்று கேரளா கூறியுள்ளது. ஆந்திரா, பண்டிட் டிரெய்னிங் கோர்சுக்கு அங்கீகாரம் தர வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
மேற்கண்ட மாநில அரசுகள் கேட்டுக்கொண்டபடி, அந்த மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சிப் படிப்பை துவங்குவதற்காக அங்கீகாரம் கேட்டு யாரும் விண்ணப்பிக்க வேண்டாம் என்று என்.சி.டி.இ., அறிவித்துள்ளது. கடந்த 13ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, அரியானா, ஆந்திரா வரிசையில், தமிழக அரசும் அதிரடி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது 750 இடைநிலை ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை இந்த வகை ஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இரண்டு லட்சம், மூன்று லட்சம் ரூபாய் என்று விலை போனது.
இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிட்டதாலும், அந்த பயிற்சியை முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலைக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாலும் தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
நடப்பு கல்வியாண்டில் அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் உள்ள இடங்கள் மட்டுமே முழுமையாக நிரம்பின. தனியார் பள்ளிகளில் சேர மாணவர்கள் ஆர்வம் காட்டவில்லை. தனியார் பள்ளிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கூட பூர்த்தியாகாமல் காத்தாடுகின்றன.
நிர்வாக ஒதுக்கீட்டை கேட்கவே வேண்டாம்; பல பள்ளிகளில் 10, 15 மாணவர்கள் தான் உள்ளனர்.  இதுபோன்ற நிலையில், மேலும் மேலும் புதிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் தேவையா என்று தமிழக அரசு யோசிக்கத் துவங்கியுள்ளது.
அதனால், இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கான பள்ளிகளை துவக்குவதற்கு அங்கீகாரம் தர வேண்டாம் என்று என்.சி.டி.இ.,க்கு தமிழக அரசு விரைவில் கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக துறை வட்டாரங்கள் தெரிவித்தன. அடுத்த கல்வியாண்டில் புதிய பள்ளிகள் துவக்குவதற்கான காலக்கெடு இம்மாதத்துடன் முடிகிறது.
புதிய பள்ளிகளுக்கு அங்கீகாரம் கேட்டு தமிழகத்தில் இருந்து ஏற்கனவே பல பேர் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த கல்வியாண்டுக்கு தடை போட முடியாத நிலை இருக்கிறது. 2010-2011ம் கல்வியாண்டு முதல் தடை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us