சலுகை அரசாணையை மறுக்கும் அரசு துறைகள்: ஊனமுற்றோர் வேதனை
சலுகை அரசாணையை மறுக்கும் அரசு துறைகள்: ஊனமுற்றோர் வேதனை
UPDATED : அக் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கல்வி, சுயவேலைவாய்ப்பு தொடர்பாக அரசிடம் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனர். தமிழக அரசு கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதனை அமல்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மறுப்பதால் ஊனமுற்றோரால் சலுகைகளை பெற இயலவில்லை.
* அரசு உத்தரவு எண் 135 (நாள்: 20.9.2008)ன்படி, ‘அரசு, அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகள், விவசாய கல்லூரிகளில் படிக்கும் ஊனமுற்றோருக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுவிலக்களித்துள்ளது. பட்டப்படிப்பு, அரசு பாலிடெக்னிக், சிறப்பு பயிலகங்களிலும் கல்வி கட்டணத்தில் விலக்களித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள், திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் ஊனமுற்றோருக்கு கல்வி கட்டணம் செலுத்துவதில் இருந்து முழுவிலக்கு அளிக்க உயர்கல்வித் துறையிலும், மீன்வளக் கல்லூரி, கால்நடை மருத்துவ கல்லூரியில் படிப்போருக்கும் முழுவிலக்கு அளிக்க தனித்தனியே அரசு உத்தரவிடப்படும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை உயர்கல்வி நிறுவனங்களில் சலுகை வழங்கப்படவில்லை.
* அரசு உத்தரவு எண் 112 (நாள்: 22.8.2008)ன்படி, ‘ஊனமுற்றோர் சுயவேலைவாய்ப்பு பெறும் வகையில் சமீபத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பாரதப் பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மத்திய அரசின் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று சுயவேலை வாய்ப்பை பெருக்க ஊனமுற்றோர் செலுத்த வேண்டிய 5 சதவீத பங்குத் தொகையையும் தமிழக அரசே ஏற்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டத்தில் தற்போது அரசு மானியமாக 35 சதவீதம் வழங்கப்படுகிறது. அரசு உத்தரவுப்படி மீதியுள்ளவற்றில் 5 சதவீதத்தை தமிழக அரசு வழங்கும். மீதியுள்ள 60 சதவீதத்திற்குத்தான் ஊனமுற்றோர் அசலையும், வட்டியையும் திருப்பித் தரவேண்டும். இதனையும் தொழில் துறையினர் மறுத்துவிடுகின்றனர்.
* மற்றொரு உத்தரவு எண் 113 (நாள்: 22.8.2008)ன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை பார்வையற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படுவதுபோலவே, உடல் ஊனமுற்றோருக்கும் வழங்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.
இதன்படி பார்வையற்றோருக்கு எஸ்.எஸ்.எல்.சி., கல்வித் தகுதிக்கு ரூ. 300, பிளஸ் 2க்கு ரூ. 375, பட்டப்படிப்புக்கு ரூ. 475 வழங்கப்படுகிறது. ஆனால் உடல் ஊனமுற்றோருக்கு சாதாரணமானவர்களைப் போலவே ரூ. 150, 200, 250 வழங்கப்படுகிறது. எனவே புதிய உத்தரவுப்படி பார்வையற்றவரைப் போல வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ஊனமுற்றோர் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பூபதி, தென்மண்டல தலைவர் ராமலிங்கம், பொருளாளர் புஷ்பராஜ் கூறுகையில், ‘பலமுறை போராடி பெற்ற அரசு உத்தரவுகளை வெளியிட்டு ஒருமாதமாகியும் துறை அதிகாரிகள் அமல்படுத்த முன்வராததால் ஊனமுற்றோரால் பயன்பெற முடியவில்லை. இந்த உத்தரவுகளை அரசு உடனே அமல்படுத்த வேண்டும்’ என்றனர்.
