சின்னம்மை பரவல்: சேலம் அரசு நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு விடுமுறை
சின்னம்மை பரவல்: சேலம் அரசு நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு விடுமுறை
UPDATED : ஜன 28, 2013 12:00 AM
ADDED : ஜன 28, 2013 07:34 AM
தமிழகத்தில், மார்ச் மாதம் துவங்கி, ஆகஸ்ட் மாதம் வரை வெயில் தாக்கம் அதிகம் இருக்கும். இதனால், சின்னம்மை என்ற தட்டம்மை போன்ற, வெப்ப நோய் தாக்கத்தால் மக்கள் அவதிப்படுவர். தற்போது, தமிழகத்தில் இரவு நேரங்களில் பனிப்பொழிவும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், சின்னம்மை நோய் தாக்கம், இப்போதே அதிகரித்துள்ளது.
தமிழக அரசு மருத்துவமனைகளில், தினமும் தோல் நோய் சிகிச்சை பிரிவுகளுக்கு வருபவர்களில், 1.25 லட்சம் பேர், உடலில் பரவலாக சிறிய கொப்புளங்கள் இருப்பதாக கூறி, புற நோயாளிகளாக சிகிச்சை பெறுவதாக, தமிழக நோய் புலனாய்வு கண்டறிவு பிரிவு அறிக்கை தெரிவிக்கிறது. மருத்துவமனை ஊழியர்களும், இந்நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
சேலம், அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவியர், 34 பேருக்கு, இந்நோய் தாக்கம் ஏற்பட்டதால், பிற மாணவிகளுக்கும் பரவாமல் இருக்கும் வகையில், ஜன., 25ம் தேதி முதல், 31ம் தேதி வரை, பயிற்சி பள்ளி விடுதிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தோல் பிரிவு டாக்டர் ஒருவர் கூறியதாவது: பெரியம்மை என்னும் அபாய நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டிருக்கிறது. சின்னம்மை நோய், வெரிஸ்லா என்ற வைரஸ் நுண்கிருமியால் பரவி வருகிறது. மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் இந்த கிருமியின் பரவல் அதிகமாக இருப்பதால், இந்நோய் தாக்கம் அதிகம் இருக்கும்.
தற்போது, பருவநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக, ஜனவரி மாதத்திலேயே இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. சின்னம்மை நோய்க்கு, தற்போது தடுப்பூசி மருந்துகள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு வயதை தாண்டிய குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும், தடுப்பூசி போட்டுக் கொண்டால், இந்நோய் தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
இந்நோய் விரைவில் பரவக்கூடிய தொற்று நோய் என்பதால், நோய் கண்டவர்களை, நல்ல கற்றோட்டமான இடத்தில், தனிமைப்படுத்த வேண்டும். நோய் கண்டவரின் உமிழ்நீர், காற்று, இருமல் ஆகியவற்றின் மூலம் கிருமிகள், அதிக அளவில் பரவக் கூடும். நோய் கண்டவருடன் குடும்ப உறுப்பினர்கள் நெருக்கமாக, இருப்பதை தவிர்ப்பது நல்லது.
சின்னம்மை தாக்கியவர்களின் உடலில், நீர் இழப்பு அதிக அளவில் இருக்கும் என்பதால், அவர்கள் சோர்வு நிலையை, எட்டாத வகையில் இளநீர், ஆரஞ்சு உள்ளிட்ட பழச்சாறுகள், நீர்ச் சத்துமிக்க பழங்களை கொடுத்தால், உடலில் நீர் இழப்பை தடுப்பதோடு, அவர்கள் விரைவில் குணம் பெறலாம்.
சின்னம்மை நோய் கண்டவர்கள், நோய் அறிகுறியாக, மூன்று நாட்கள் தொடர் காய்ச்சலால் அவதிக்குள்ளாவோர், உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனை, டீன் டாக்டர் வள்ளிநாயகம் கூறுகையில், "நர்ஸ் பயிற்சி பள்ளி மாணவிகளில், 10க்கும் மேற்பட்டோருக்கு ஒரே நேரத்தில், சின்னம்மை தாக்கம் ஏற்பட்டதையடுத்து, நர்ஸ் பயிற்சி பள்ளிக்கு, ஒரு வாரம் விடுப்பு அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவிகளுக்கு நோய் குணமாவதை பொறுத்து, பயிற்சி பள்ளி திறக்கப்படும்&'&' என்றார்.
