தினமலர் கல்வி சேவை பாராட்டுக்குரியது: அதிகாரி புகழாரம்
தினமலர் கல்வி சேவை பாராட்டுக்குரியது: அதிகாரி புகழாரம்
UPDATED : பிப் 04, 2013 12:00 AM
ADDED : பிப் 04, 2013 07:15 AM
நெய்வேலி: "நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில் படிக்கும் மாணவ சமுதாயத்தின் மீது அக்கறையோடு செயல்படும், தினமலர் நாளிதழின், கல்வி சேவை பாராட்டுக்குரியது" என, என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை பொது மேலாளர் ஹரிஹரக்குமார் பேசினார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம், 11ல் உள்ள லிக்னைட் அரங்கில், தினமலர் சார்பில், நேற்று, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியை தொடக்கி வைத்து ஹரிஹரக்குமார் பேசியதாவது:
பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு இருந்தால், மாணவர்கள் தேர்வில் மட்டுமின்றி, வாழ்விலும் ஜெயித்துக்காட்ட முடியும். வெற்றிக்கான மந்திரம், தந்திரம் அனைத்தும் உங்களிடமே உள்ளது. மனத்திடம் தான் மந்திரம். தன்னம்பிக்கை தான் தந்திரம்.
எனவே, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை வணங்கி, நீங்கள் தொடங்கும் அனைத்து செயல்களும் வெற்றியை தரும். ஆழ்கடலுக்குள் சென்று முத்தெடுக்கும் வயது. எனவே, கஷ்டப்பட்டு படிக்காமல், இஷ்டப்பட்டு படியுங்கள்; வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க முடியும்.
நகரங்களில் வசிக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி, கிராமங்களில் படிக்கும் மாணவ சமுதாயத்தின் மீதும், அக்கறையோடு செயல்படும், தினமலர் கல்வி சேவை பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யாவை பாராட்டி, அப்பள்ளி முதல்வர் மருதாத்தாளுக்கு, தினமலர் நிறுவனர் டி.வி.ஆர்., உருவம் பொறித்த, வெள்ளி விருதை, பொது மேலாளர் ஹரிஹரக்குமார் வழங்கினார்.
