விரிவுரையாளர் பணியிடம்: போட்டித் தேர்வு மூலம் நிரப்ப கோரிக்கை
விரிவுரையாளர் பணியிடம்: போட்டித் தேர்வு மூலம் நிரப்ப கோரிக்கை
UPDATED : பிப் 05, 2013 12:00 AM
ADDED : பிப் 05, 2013 07:36 AM
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக இருந்த, இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும், தி.மு.க., ஆட்சியின் போது, பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்டன. தற்போது இவை அனைத்தும், டி.ஆர்.பி., தேர்வு நடத்தப்பட்டு, அதன் மதிப்பெண் அடிப்படையில் பணியிடம் நியமிக்கப்படுகிறது.
சமீபத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் தகுதித்தேர்வு அடிப்படையில் ஒட்டுமொத்தமாக நியமிக்கப்பட்டனர். அதே போல், சமீபத்தில் அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கு, 290 பேர் போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இதில், 65 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இத்தேர்வு மதிப்பெண்ணுடன், அனுபவத்துக்கு, இரண்டு மதிப்பெண், உயர்கல்விக்கு, எட்டு மதிப்பெண் வழங்கப்பட்டது.
இதனால் போட்டித்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கும், நெட், செட் உள்ளிட்ட உயர்கல்வி படித்தவர்களுக்கும் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் தகுதி வாய்ந்தவர்கள் எவ்வித, முறைகேடும் இன்றி நியமிக்கப்பட்டுள்ளனர்.
சர்ச்சைகளின்றி, நடந்த கல்லூரி விரிவுரையாளர் தேர்வு மூலம், தகுதியற்றவர்கள் முறைகேடாக பதவி பெறுவதும் தடுக்கப்பட்டது. இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில், அரசு கலைக்கல்லூரிகளில் காலியாக உள்ள, 1,063 உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அரசு கலைக்கல்லூரிகளில் கடைசியாக கடந்த, 2009-10ம் ஆண்டில், 1,022 பேர் தேர்வு செய்யப்பட்டது. இதில் பணி அனுபவத்துக்கு அதிகபட்சமாக, 15 மதிப்பெண்ணும், நேர்முகத் தேர்வுக்கு, 10 மதிப்பெண்ணும், பி.ஹெச்.டி., பட்டத்துக்கு அதிகபட்சமாக, ஒன்பது மதிப்பெண்ணும், பி.ஹெச்.டி., பட்டம் பெறாமல், எம்.பில்., பட்டத்துடன் நெட், செட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தால், ஆறு மதிப்பெண்ணும், தகுதித்தேர்வில் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தால், மூன்று மதிப்பெண்ணும் வழங்கப்பட்டு, விரிவுரையாளர் தேர்வு செய்யப்பட்டது.
பல்வேறு முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விஜிலென்ஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், இதே முறையை பின்பற்றாமல், பள்ளி ஆசிரியர்களையும், இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளர்களையும் தேர்வு செய்தது போல, தகுதித்தேர்வு அடிப்படையில், அரசுக்கலைக்கல்லூரி விரிவுரையாளர்களையும் தேர்வு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து விரிவுரையாளர்கள் சிலர் கூறியதாவது: தற்போது பலரும் பணம் கொடுத்து, பி.ஹெச்.டி., பட்டமும், தகுதிச்சான்றிதழும் பெறும் நிலை நிலவுகிறது. இதை அடிப்படையாக வைத்து நடக்கும் நேர்முகத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகிறது.
தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யும் போது, சிறப்பான தகுதி பெற்றவர்கள் மட்டுமே பதவிக்கு வர முடியும். இதனால் கல்வித்தரமும் அதிகரிக்கும். இதனால் இன்ஜினியரிங் கல்லூரி விரிவுரையாளர் தேர்வை போன்றே, அரசுக்கலைக்கல்லூரி விரிவுரையாளர் தேர்வும், போட்டித்தேர்வு மூலம் நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
