10 மணிநேர மின்தடை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்
10 மணிநேர மின்தடை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அச்சம்
UPDATED : பிப் 08, 2013 12:00 AM
ADDED : பிப் 08, 2013 07:46 AM
சில நாட்களாக குறைந்திருந்த மின்தடை நேரம், மீண்டும் அதிகரித்து 10 மணி நேரம் என்ற அளவில் உள்ளது. காலை 6-9, பகல் 12-3, மாலை 6-7, இரவு 9-10, நள்ளிரவில் மற்றும் அதிகாலையில் ஒரு மணி நேரம் என 10 மணி நேர மின்தடை செய்யப்படுகிறது. இதனால் பொதுத் தேர்வை சந்திக்க உள்ள, மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.
இதுகுறித்து மாணவி ஒருவர் கூறியதாவது: பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ளேன். மின்தடையால் இரவிலும், அதிகாலையிலும் படிக்க முடியவில்லை. செய்முறை தேர்விலும பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாலை நேர மின் தடையால் கோச்சிங் வகுப்புகளும் தடைப்பட்டு, பாடங்களை படிக்க முடியாமல் மதிப்பெண் குறையுமோ என்ற அச்சமாக உள்ளது.
காலைநேர மின்தடையால் பள்ளிக்கு கிளம்புவதிலும் தாமதம் ஏற்பட்டு பதட்டத்துடன் பள்ளிக்கு செல்வதால், பாடங்களை கவனிக்க முடியாமல் கவனச்சிதறல் ஏற்படுகிறது.
மின் தடை பிரச்னை குறித்து பெற்றோர் கூறியதாவது: எனது மகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத உள்ளார். மின்தடையால் காலையில் பம்ப்செட் முதல் மிக்சியில் சட்னி அரைப்பது வரை தாமதகிறது. பிள்ளைகளை பள்ளிக்கு சரியான நேரத்திற்கு அனுப்ப முடியாமல் சிரமப்படுகிறோம்.
தேர்வு நேரத்தில் காய்ச்சலோ, உடல்நிலை பாதிப்போ வந்துவிடாமல் பார்த்து கொள்ள வேண்டும். ஆனால், மின்தடையால் மாணவர்கள் உரிய நேரத்தில் சாப்பிட முடியாமலும், இரவில் கொசுக்கடியிலும், உடல்நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பள்ளி முடிந்து வந்தவுடன் மின்தடை ஏற்படுவதால் இரவில் 8-9 மணி வரை மட்டுமே படிக்க முடிகிறது. சராசரி மாணவர்களின் தேர்ச்சி பாதிக்கப்படும்.
பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தும், மின்வெட்டால், மதிப்பெண்ணில் "வெட்டு&' விழுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
