இடம் தேர்வு செய்வதில் இழுபறி: மாட்டுக் கொட்டகையில் மாணவர்கள்
இடம் தேர்வு செய்வதில் இழுபறி: மாட்டுக் கொட்டகையில் மாணவர்கள்
UPDATED : பிப் 13, 2013 12:00 AM
ADDED : பிப் 13, 2013 09:05 AM
வாழப்பாடி அடுத்த காரிப்பட்டியில், பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை செயல்பட்டு வந்தது. அரசு உயர்நிலைப் பள்ளியில், காரிப்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த, 300 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். ஒன்பது ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த, இரு ஆண்டுகளுக்கு முன், நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்காக, ஒருங்கிணைந்த பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. பள்ளி வளாகத்தை மாற்றி அமைக்க, நிலம் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்ததால், காரிப்பட்டி பஸ் ஸ்டாப் அருகிலுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான பயணியர் விடுதி வளாகத்திற்கு, உயர்நிலைப் பள்ளி தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.
பள்ளி வளாகம் அமைப்பதற்கு, அரசு கரட்டு புறம்போக்கு நிலத்தை தேர்வு செய்ததால், வழித்தடம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. கடந்தாண்டு ஒரு தம்பதியர் வழித்தடத்தை தானமாக வழங்கினர். ஆனால், எஸ்.எஸ்.ஏ., மற்றும் ஆர்.எம்.சி., மற்றும் கல்வித்துறை சார்ந்த திட்டத்தில் இருந்து, காரிப்பட்டி பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் அமைக்க, நிதி ஒதுக்கீடு பெறுவதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
தொடர்ந்து, இரு ஆண்டுகளாக அடிப்படை வசதியில்லாத, ஆஸ்பெஸ்டாஸ் சிமென்ட் ஷீட்களால் அமைக்கப்பட்ட "மாட்டுகொட்டகை&' போன்ற வகுப்பறைகளில் மாணவ, மாணவியர் பாடம் படித்து வருகின்றனர்.அதனால், மாணவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு கல்வித்தரம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளதாக, பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதற்கிடையே, பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில், கூடுதலாக உள்ள வகுப்பறை கட்டிடங்களுக்கு, சில வகுப்புகள் மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, பயணியர் மாளிகை வளாகத்திலேயே பாடம் கற்பிக்கப்படுகிறது.
எனவே, பள்ளிக்கட்டிடம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை சீரமைக்கவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்து, காரிப்பட்டி உயர்நிலைப்பள்ளிக்கு அறிவியல் ஆய்வுக்கூடம், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி, விளையாட்டு திடல் உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டிடங்களை அமைக்கவும், சேலம் மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
