பல்கலை தேர்வில் 60க்கு ஒருவர் தேர்ச்சி: விசாரணைக்கு உத்தரவு
பல்கலை தேர்வில் 60க்கு ஒருவர் தேர்ச்சி: விசாரணைக்கு உத்தரவு
UPDATED : பிப் 14, 2013 12:00 AM
ADDED : பிப் 14, 2013 07:45 AM
மேடவாக்கம் கூட்ரோடு பகுதியில் உள்ளது, காயிதே மில்லத் கலை கல்லூரி. இக்கல்லூரியின் பி.காம்., மூன்றாம் ஆண்டு மாணவர்கள், 60 பேர் எழுதிய, ஐந்தாம் பருவத் தேர்வில் ஒருவர் தான் தேர்ச்சி பெற்றார்.
"பேராசிரியையின் பழிவாங்கும் நடவடிக்கையால், எங்களை பெயிலாக்கி விட்டனர். எனவே, தேர்வு தாள்களை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்; சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக்கோரி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை பல்கலைக் கழக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியை சந்தித்து, பிரச்னை குறித்து விளக்கி உள்ளார் கல்லூரி முதல்வர். துணைவேந்தர் கவனத்திற்கும் பிரச்னை கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக வட்டாரங்கள் கூறியதாவது: துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரி, மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் மட்டுமே, கூட்டுறவு துறை உள்ளன. எனவே, இரு துறை கல்லூரி பேராசிரியர்கள் தவிர, வேறு யாரும், விடைத்தாள்களை திருத்த வாய்ப்பில்லை.
யார் தேர்வு தாள்களை திருத்தியது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. உண்மை நிலவரம் விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
