UPDATED : பிப் 15, 2013 12:00 AM
ADDED : பிப் 15, 2013 08:25 AM
பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக வழங்க, தலா ரூ.13,500 மதிப்புள்ள 508 லேப்டாப்கள், பள்ளிகள் துணை ஆய்வாளர் அறையில் நவ.,30ல் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் மாலை இந்த அறைக் கதவின் மேல் தாழ்ப்பாள் உடைக்கப்பட்டிருந்தது.
முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள் பார்த்தபோது, 10 லேப்டாப்கள் திருடப்பட்டு, பைகளை மட்டும் விட்டுச் சென்றது தெரிந்தது. அதிர்ச்சியுற்ற அதிகாரிகள், மீதமிருந்த எண்ணிக்கையை சரிபார்த்தபோது, மேலும் 44 லேப்டாப்கள் திருடு போயிருந்தன.
இதுகுறித்து, போலீசில் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயமீனாதேவி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.
போலீசார் கூறியதாவது: பத்து லேப்டாப்களை ஜன்னல் வழியாக எடுத்துக்கொண்டு, அதன் பைகளை, ஜன்னல் வழியாக எடுக்க முடியாததால், அதை மட்டும் விட்டுச் சென்றுள்ளனர். அலுவலக ஊழியர்கள் தொடர்பின்றி, வெளிநபர்கள் எடுக்க முடியாது.
அரசு பொருட்களை பாதுகாக்க, போலீஸ் பாதுகாப்பு கேட்டிருக்க வேண்டும். ஆனால், கேட்கவில்லை. 54 லேப்டாப்கள் கொள்ளை போனது அவ்வப்போது நடந்ததா அல்லது ஒரே நாளில் நடந்ததா என விசாரணை நடத்துகிறோம் என்றனர்.
