அமெரிக்க பொருளாதார நெருக்கடி: தகவல் தொழில்நுட்ப துறைக்கு பாதிப்பு
அமெரிக்க பொருளாதார நெருக்கடி: தகவல் தொழில்நுட்ப துறைக்கு பாதிப்பு
UPDATED : நவ 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
பெங்களூரு: அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் கர்நாடகாவில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய முக்கிய தொழில் துறைகள் குறித்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கர்நாடகாவில்,பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில், செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியில், இந்தாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 2 லிருந்து 3 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.
இது, இதற்கு முந்தைய ஆறு மாதங்களில் இல்லாத அளவு. அதேபோல், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மனித உழைப்பும் 5 சதவீதம் குறைந்துள்ளது. லாபத்தின் அளவும் 3 சதவீதம் குறைந்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம்.
அதே நேரத்தில், கர்நாடகாவில் ஸ்டீல் தொழில் வளர்ச்சி அடைந்துள்ளது. இத்துறையில் உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆட்டோமொபைல்ஸ் துறையும் மிதமான வளர்ச்சியை எட்டியுள்ளது. இத்துறையில், உற்பத்தி மற்றும் பயன்பாடு ஆகியவை 5 சதவீதமும், விற்பனை 7 சதவீதமும் அதிகரித்துள்ளது. ஏற்றுமதியும் 2 லிருந்து 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இத்துறையில் உள்நாட்டுக்கான தேவையை அதிகரிக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய அரசிடம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சார்பில் வலியுறுத்தபட்டுள்ளது.
