‘இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்’: அப்துல் கலாம்
‘இளைஞர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும்’: அப்துல் கலாம்
UPDATED : நவ 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இந்திய தொழில் கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.,) சார்பில், ‘யங் மைண்ட்ஸ்’ என்ற தலைப்பிலான இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களின் கேள்விகளுக்கு கலாம் அளித்த பதில்கள்:
2020ல் இந்தியா வல்லரசாகுமா?
(இக்கேள்விக்கு தான் சொல்வதை திரும்பச் சொல்லச் செய்து கலாம் பதிலளித்தார்) என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும்.
இளமைப் பருவத்தில் உங்களை கவர்ந்தவர் யார்?
எனக்கு 10 வயது இருக்கும்போது ராமநாதபுரம் பள்ளியில் ஆசிரியராக இருந்த சிவசுப்பிரமணிய அய்யர், பறவைகள் பறக்கும் விதம் குறித்து சொல்லி, அதை கடற்கரைக்கு அழைத்துச் சென்று நேரிலும் காட்டினார். அவரே என்னை இளமையில், ‘இம்ப்ரஸ்’ செய்தவர். அப்போதே என்னுடைய லட்சியம் புகுத்தப்பட்டது.
இளைஞர்கள் அரசியலுக்கு வருவது பற்றி?
இளைஞர்கள் அவசியம் அரசியலுக்கு வரவேண்டும். நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தும் பார்லிமென்டில் முடிவு செய்யப்படுகிறது என்ற நிலையில் இளைஞர்கள் அரசியலுக்கு கண்டிப்பாக வரவேண்டும். நல்ல அரசியல் பண்ணவேண்டும்.
இந்தியாவில் பயங்கரவாதமும், வெடிகுண்டு வெடிப்பதும் எப்போது குறையும்?
நம்நாட்டில் வறுமைக் கோட்டுக்கு கீழ் 22 கோடி பேர் உள்ளனர். அவர்களின் நிலை, 2020ல் உயர்ந்தால் பயங்கரவாதமும் தானாக குறைந்து விடும்.
உங்களுக்கு ஒரு குழந்தை இருந்தால் அதனிடம் என்ன போதிப்பீர்கள்?
எனக்கு கோடான கோடி குழந்தைகள் இருக்கின்றனர். எனக்கு குழந்தை இருந்திருந்தால் மகாத்மா காந்தியின் தாய் அவருக்கு போதித்தது போல், மற்றவர்களுக்கு வலி ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்று சொல்லிக் கொடுத்திருப்பேன். அதுவே மற்ற நல்ல பழக்கங்களை ஏற்படுத்தி விடும்.
இந்தியாவின் முன்னேற்றம் இளைஞர்களின் கையில் உள்ளது என்று சொல்லியுள்ளீர்கள். ஆனால், தற்போது இளைஞர்களின் நிலை மோசமாக உள்ளது. அவர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?
எண்ணத்தில் மனத்தூய்மை இருந்தால் அனைத்தும் சரியாக இருக்கும்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் நிற்கும் ஒபாமா ஐ.டி., துறையில் இருக்கும் இந்தியர்களின் வேலையை பறிப்பதாக கூறியுள்ளாரே?
நூறு கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆண்டுக்கு 7,000 கோடி டாலர் மதிப்பில் உற்பத்தி நடக்கிறது. அதில் 4,000 கோடி டாலர் இந்தியாவுக்குள்ளே நடக்கிறது. மீதியுள்ள 3,000 கோடி டாலர் மட்டும் வெளிநாடுகளில் நடக்கிறது. ஆகையால், அதுகுறித்து கவலைப்பட தேவையில்லை.
வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் எந்த துறையில் மாணவர்கள் சாதிக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
அனைத்து துறைகளிலும் மாணவர்கள் சாதிக்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தில் உங்களின் பங்கு என்ன?
அணுசக்தி மூலம் மின்சாரம் கிடைக்க யுரேனியம் அவசியம். அது நம்மிடம் கிடையாது. நம்மிடம் இருக்கும் தோரியத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க இன்னும் 10 ஆண்டுகளாகும். அதுவரை மின்சார உற்பத்திக்கு யுரேனியம் கிடைக்க அணுசக்தி ஒப்பந்தம் உதவும்.
