தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் சி.பி.சி.எஸ்., அமல்
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் சி.பி.சி.எஸ்., அமல்
UPDATED : நவ 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் 10 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளில் அடுத்த கல்வியாண்டில் விருப்ப பாடம் தேர்வு செய்யும் முறை (சி.பி.சி.எஸ்.,) நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
கோவையில் பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக்கல்லூரி, சி.ஐ.டி., ஜி.சி.டி., குமரகுரு, கற்பகம் ,ராமகிருஷ்ணா தொழில்நுட்பக்கல்லூரி, ஈரோட்டில் கொங்கு இன்ஜி., கல்லூரி, பண்ணாரியம்மன் தொழில்நுட்ப கல்லூரி, ஓசூரில் அதியமான் இன்ஜி., கல்லூரி, நாமக்கல்லில் கே.எஸ்.ஆர்., கல்லூரி ஆகியவை கோவை அண்ணா பல்கலையின் கீழ் செயல்படும் தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகள்.
இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் முறை (சாய்ஸ் பேஸ்டு கிரெடிட் சிஸ்டம்ஸ்) அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இம்முறை மூன்று, நான்காம் ஆண்டு படிக்கவுள்ள மாணவர்களுக்கு பொருந்தும்.
இதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க, 10 தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளும் ஒன்றிணைந்து கல்விக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளில் நடத்தப்படும் தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வரவும், ஒரே நேரத்தில் தேர்வு நடத்தவும் முடிவெடுக்க தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்கல்லாரிகளில் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் குழு அமைக்கப்படவுள்ளது.
தன்னாட்சி அந்தஸ்து பெற்ற 10 இன்ஜி., கல்லூரிகளும், அடுத்த கல்வியாண்டில் இருந்து 50 சதவீத தேர்வை ஆன்லைன் மூலம் மட்டுமே எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தன்னாட்சி அந்தஸ்து பெற்ற கல்லூரிகளின் செயல்பாட்டைப் பொறுத்து மற்ற கல்லூரிகளுக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு துணைவேந்தர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
