இலவச சைக்கிள் குறைவான ஒதுக்கீடு: பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
இலவச சைக்கிள் குறைவான ஒதுக்கீடு: பள்ளி மாணவர்கள் ஏமாற்றம்
UPDATED : நவ 03, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சேலம்: தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பிளஸ் 1 படிக்கும் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு இலவசமாக சைக்கிள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், மாணவர் சேர்க்கை முடிந்த பின், ஆக., 31ம் தேதி, அனைத்து பள்ளியிலும் மாணவர் எண்ணிக்கை கணக்கில் எடுக்கப்பட்டு, அதனடிப்படையில் சைக்கிள் தயாரிப்புக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
இதனால், கல்வியாண்டின் இறுதியான, பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் தான், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு வந்தது. கல்வியாண்டு துவங்கும் போதே இலவச சைக்கிள் வழங்கினால், மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவ, மாணவியருக்கு இரண்டாண்டு படிப்புக்கும் உபயோகமாக இருக்கும் என கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, நடப்பு கல்வியாண்டு துவங்கிய ஓரிரு மாதங்களில் இலவச சைக்கிள் வழங்கப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, அனைத்து பள்ளிகளுக்கும், இலவச சைக்கிள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மாணவர்களுக்கும் வழங்கப்பட்டு விட்டது.
ஒதுக்கீடு செய்ததில் பற்றாக்குறை இருந்ததால், பெரும்பாலான பள்ளிகளில், அனைத்து மாணவர்களுக்கும் சைக்கிள் வழங்க முடியவில்லை. பல மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கப்படாமல் உள்ளது. ஒரே வகுப்பில் சக மாணவர்களுக்கு சைக்கிள் கிடைத்தும், தங்களுக்கு கிடைக்காததால், மாணவர்கள் பலர், பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர்.
அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
வழக்கமாக, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை முடிந்த பின்பே, சைக்கிள்களுக்கான பெயர் பட்டியலை அனுப்பி வைப்போம். நடப்பாண்டில், முன்கூட்டியே இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டதால், கடந்த ஆண்டு வழங்கிய பெயர் பட்டியலை கொண்டு, அந்த அளவுக்கு சைக்கிள்களை பள்ளிகளுக்கு அனுப்பி விட்டனர்.
இந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததால், ஒரு சில மாணவர்களுக்கு சைக்கிள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விடுபட்ட மாணவர்களுக்கான, சைக்கிள் தேவைக்கான பட்டியல், கல்வித் துறை நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
அவை, நலத்துறைகளுக்கு அனுப்பப்பட்டு, விரைவில் சைக்கிள் வழங்கப்படும் என கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தலைமை ஆசிரியர்கள் கூறினர்.
