அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் இல்லத்தை தாக்கி மாணவர்கள் ரகளை
அண்ணாமலைப் பல்கலை துணைவேந்தர் இல்லத்தை தாக்கி மாணவர்கள் ரகளை
UPDATED : மார் 02, 2013 12:00 AM
ADDED : மார் 02, 2013 08:51 AM
சிதம்பரம்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் 75 சதவீதத்திற்கும் குறைவாக வருகைப் பதிவு உள்ள மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு மீண்டும் மறுபயிற்சி வழங்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இதனால் பொறியியல் துறை மாணவர்கள் சிலர் திடீரென நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். கல்விக் கட்டணம் அதிகரித்ததாகவும் குறுஞ்செய்தி பரப்பிய வதந்தியாலும், மாணவர்கள் பல்கலை வளாகத்திற்குள் கூடினர். கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து ஆத்திரடைந்த மாணவர்கள் பொறியியல் கல்லூரி அலுவலக கண்ணாடியில் கல் வீசி தாக்கி நொறுக்கினர்.
அங்கிருந்து புறப்பட்ட மாணவர்கள், துணைவேந்தர் இல்லத்தில் புகுந்து பூந்தொட்டிகளை உடைத்தனர். ஜன்னல் கண்ணாடிகளை கல்வீசி தாக்கி உடைத்தனர். இதனால் போர்க்களம் போல் காணப்பட்டது. தகவறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி., துரை மற்றும் போலீசார், துணைவேந்தர் ராமநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.
இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: அனைத்து துறைகளில் 80 சதவீதம் வருகை பதிவேடு உள்ளவர்கள் தான் தேர்வு எழுத முடியும். 80 சதவீதத்திற்கும் குறைவான வருகைப் பதிவேடு உள்ளவர்கள் அபராத கட்டணத்துடன் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
அதிலும் 75 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்பட்டது. பல்கலைக்கழக தணிக்கைத்துறை இந்த நடவடிக்கை தவறு என தெரிவித்ததையடுத்து. இனி 75 சதவீதம் வருகைப் பதிவேடு குறைந்தவர்களுக்கு கட்டணம் வசூலிப்பதுடன் ரீகோர்ஸ் என்ற மறுபயிற்சிக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் பிரச்னையில் ஈடுபட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தில் வருகைப்பதிவு குறைந்த வெளி மாநில மாணவர்கள் ஈடுபட்டனர். தற்போது மாணவர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில், 75 சதவீத்திற்கு குறைவாக வருகைப் பதிவு உள்ள மாணவர்க்கு ரீகோர்ஸ் நடைமுறை அடுத்த செமஸ்டரில் இருந்து துவங்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.
