இடவசதி இல்லாத கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் வருமா?
இடவசதி இல்லாத கிளை நூலகத்திற்கு புதிய கட்டடம் வருமா?
UPDATED : மார் 11, 2013 12:00 AM
ADDED : மார் 11, 2013 08:23 AM
அச்சிறுப்பாக்கம்: அச்சிறுப்பாக்கத்தில் 40 ஆண்டுகளாக, நூலகம், வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. போதிய இட வசதி இல்லாததால், சொந்த கட்டடம் கட்ட வேண்டும், எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள கிளை நூலகம், செங்கல்பட்டு நூலக ஆணைக்குழு கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நூலகத்திக்கு சொந்த கட்டடம் இல்லாததால், கடந்த 40 ஆண்டுகளாக, அச்சிறுப்பாக்கம் பகுதியில் ஆங்காங்கே உள்ள வாடகை கட்டடங்களில் செயல்பட்டது.
தற்போது, பேரூராட்சிக்குட்பட்ட நடுத்தெருவில், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகத்தில் பொது அறிவு, கதை, கட்டுரை, நாவல், மருத்துவம், குழந்தைகளுக்கான அறிவு வளர்ச்சி உட்பட பல்வேறு தலைப்புகளில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன.
தினமும் 70க்கும் மேற்பட்ட வாசகர்கள், பத்திரிகைகள் படிக்க வருகின்றனர். நூலகத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்து, வீட்டிற்கு நூல்களை வாங்கி செல்கின்றனர்.
நூலகத்திற்கு வரும் வாசகர்கள் அமர்ந்து படிக்க, போதிய இடவசதி இல்லை. இதனால் வாசகர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். புதிய நூலகம் கட்டுவதற்காக, செங்கல்பட்டு நூலக ஆணைக்குழு சார்பில், பேரூராட்சியிடம் இடம் ஒதுக்கி தர கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுவரை நடவடிக்கை இல்லாததால், நூலக ஆணைக்குழு புதிய கட்டடம் கட்ட முடியாமல் உள்ளது. வாசகர்கள் நலன் கருதி, நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரி உள்ளனர்.
இதுகுறித்து, செங்கல்பட்டு நூலக ஆணைக்குழு உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "பேரூராட்சி சார்பில் இடம் ஒதுக்கி கொடுத்தால், புதிய நூலக கட்டடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
பேரூராட்சி அதிகாரி கூறுகையில், "இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
