"50% மாணவ, மாணவியரே பார்மசி படிப்பை தேர்வு செய்கின்றனர்"
"50% மாணவ, மாணவியரே பார்மசி படிப்பை தேர்வு செய்கின்றனர்"
UPDATED : மார் 14, 2013 12:00 AM
ADDED : மார் 14, 2013 08:39 AM
ஊட்டி, ஜெ.எஸ்.எஸ்., கல்லூரியில், மருந்தாக்கியல் பிரிவு மாணவர்களுக்கான, தேசிய கருத்தரங்கு நடந்தது. இதில், பங்கேற்ற, இந்திய பார்மசி கல்லூரிகள் சங்க தலைவர் டாக்டர் சின்னசாமி கூறியதாவது:
உயிர் காக்கும் மருந்து உற்பத்தியில், இந்தியா சர்வதேச அளவில், வேகமாக வளர்ந்து வருகிறது. நாட்டில், 90 -100 மருந்து உற்பத்தி செய்யும் கம்பெனிகள், அமெரிக்காவின் இணைப்பு நிறுவனங்களாக உள்ளன. நம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகள், 120 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நாட்டின் பொருளாதாரத்தில், மருந்து துறை, முக்கியப் பங்காற்றி வருகிறது. விலை உயர்ந்த, குறிப்பிட்ட ஒரு சில வகை மருந்துகள் மட்டுமே, வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படுகின்றன. அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில், புதிய மருந்து கண்டுபிடிப்பு தொடர்பான, ஆய்வுக்கு பெருமளவு தொகை செலவிடப்படுகிறது.
உதாரணமாக, ஒரு மருந்தை தயாரிக்க, 20 பில்லியன் வரை செலவிடப்படுகிறது. இந்தியாவில், ஆராய்ச்சிக்காக, இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனால், புதிய மருந்து கண்டுப்பிடிப்பு தொடர்பான ஆராய்ச்சிகள் குறைவாக உள்ளன.
எனவே, ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும். கிளினிக் நடத்தி வரும் மருத்துவர்கள், தங்களிடம் தொடர்ச்சியாக வரும் நோயாளிகளுக்கு, தங்கள் கிளினிக்கில் இருந்து மருந்து, மாத்திரைகளை வழங்க, அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாறாக, அவர்கள் மருந்து, மாத்திரைகளை வெளி நோயாளிகளுக்கு விற்க முடியாது.
ஆண்டு தோறும், 50 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே பார்மசி துறையை தேர்ந்தெடுக்கின்றனர். பார்மசி துறை குறித்த விழிப்புணர்வை அதிகம் ஏற்படுத்த வேண்டும்.
மருந்து கடைகளில் பணிபுரியும், மருந்தாளுனர்கள், நோயாளிகளுக்கு கொடுக்கும் மருந்தின் முழு தன்மையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அந்த மருந்தின் வீரியம், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் மருத்துவ மாற்றங்கள் குறித்து, நோயாளிகளுக்கு விளக்கம் கூடிய அளவுக்கு விவரம் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
இவ்வாறு, டாக்டர் சின்னசாமி கூறினார்.
