UPDATED : மார் 15, 2013 12:00 AM
ADDED : மார் 15, 2013 08:31 AM
சென்னை: மத்திய சிறையில் உள்ள சமுதாய கல்லூரிகள் மூலம், கல்வி கற்ற, சிறை கைதிகள், 175 பேர், பட்டய படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகத்தில், திருச்சி, பாளையங்கோட்டை, வேலூர், மதுரை, சேலம், சென்னை புழல் என, ஆறு மத்திய சிறைகளில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்துடன் இணைந்த, மகாத்மா காந்தி சமுதாய கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இக்கல்லூரிகள் மூலம், சுகாதார உதவியாளர், ஆடை வடிவமைப்பு, கணினி வன்பொருள் பழுது பார்ப்பு, அலைபேசி பழுது பார்ப்பு, அழகு கலை நிபுணர் பயிற்சி, நான்கு சக்கர வாகன பராமரிப்பு என, 20க்கும் மேற்பட்ட பட்டய படிப்புகள் கற்று தரப்படுகின்றன.
சமுதாய கல்லூரியின் மூலம், சிறை கைதிகள் அதிகமானோர், கல்வி கற்று வருகின்றனர். 2012 ஜன.,யில் நடந்த தேர்வுகளில், தமிழகத்தின், ஒன்பது மத்திய சிறைகளிலிருந்து, 185 பேர் தேர்வு எழுதினர். இதில், 175 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.ஐந்து பேர் முதலிடம் பிடித்து, தங்க பதக்கம் வென்றுள்ளனர்.
மதுரை மத்திய சிறையில் உள்ள அருளானந்தம், சமையல் கலை பட்டய படிப்பு, வீரபாரதி, நான்கு சக்கர வாகன பராமரிப்பு பட்டய படிப்பு, ராஜிவ் கொலை வழக்கில் கைதாகி, வேலூர் மத்திய சிறையில் உள்ள பேரறிவாளன், பவானிசிங் ஆகிய இருவரும், டி.டி.பி., பட்டய படிப்பிலும், கடலூர் மத்திய சிறையை சேர்ந்த, கன்னியப்பன் எலக்டிரிஷியன் பட்டய படிப்பிலும் தங்க பதக்கம் பெற்றுள்ளனர்.
