மேயரின் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருப்பு: மாணவர்கள் சோர்வு
மேயரின் வருகைக்காக 3 மணி நேரம் காத்திருப்பு: மாணவர்கள் சோர்வு
UPDATED : நவ 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: குடற்புழுக்களை நீக்கும் மாத்திரை வழங்கும் நிகழ்ச்சிக்கு, மேயரின் வருகைக்காக பள்ளி மாணவ, மாணவிகள் 300 பேர் மூன்று மணி நேரம் காத்துக் கிடந்து சோர்வடைந்தனர்.
சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரத்தசோகை நோயைப் போக்க குடற்புழுக்களை நீக்கும் ஆல்பெண்டாசோல் (400 மில்லி கிராம்) மாத்திரைகளை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு மாத்திரை வழங்கும் நிகழ்ச்சி, மேயர் தலைமையில் வேளச்சேரி ராஜலட்சுமி நகர் மாநகராட்சி பள்ளியில் நடந்தது. காலை 10 மணிக்கு நிகழ்ச்சி தொடங்குவதாக இருந்தது. இதற்காக அந்த பள்ளியின் ஆசிரியர்கள் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளி மைதானத்தில் வரிசையாக காலை 8.30 மணிக்கு அமர வைத்து விட்டனர்.
மேயர் 10 மணிக்கு வரவில்லை. மாநகராட்சி மன்ற எதிர்கட்சித் தலைவர் சைதை ரவி, பா.ம.க., மன்றத் தலைவர் ஜெயராமன், கவுன்சிலர் சாந்தி மற்றும் சுகாதார அதிகாரிகள் மேயரின் வருகைக்காக காத்திருந்தனர். மேயர் 11.30 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தார். 3 மணி நேரம் ஒரே இடத்தில் வெயிலில் அமர்ந்து இருந்ததால், மாணவ, மாணவிகள் சோர்ந்து விட்டனர்.
குடற்புழுக்களை நீக்கும் ஆல்பெண்டாசோல் மாத்திரைகள், சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் ரூபாய் செலவில் 313 பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு நவ., 5ம் தேதி வழங்கப்பட்டன.
