UPDATED : நவ 06, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: நாட்டிலேயே முதல் முறையாக ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பங்களுக்கான போலீஸ் விசாரணையை இ-மெயில் மூலம் செய்யும் நடைமுறையை சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய திட்டத்தை கமிஷனர் ஜாங்கிட் நவ., 5ம் தேதி துவக்கி வைத்தார்.
தற்போது, பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பித்துள்ளவர்கள் குறித்த போலீஸ் விசாரணைக்கு, மனுதாரர் குறித்த அனைத்து விவரங்களும் பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் கமிஷனர் அல்லது எஸ்.பி., அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கிருந்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு விண்ணப்பம் அனுப்பி வைக்கப்படும். அங்குள்ள போலீசார் விண்ணப்பதாரரின் முகவரிக்கு நேரில் சென்று ‘வெரிபிகேஷன்’ செய்வார். பின், அந்த அறிக்கை கமிஷனர் அலுவலகத்தில் பெறப்பட்டு, அங்கிருந்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.
இந்த நடைமுறைக்கு ஒரு மாத காலத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. விண்ணப்பங்கள் ஸ்டேஷன் மாறிச் சென்றுவிட்டால் ஆறு மாதங்கள் கூட தாமதமாகிவிடுகிறது. இதனால், மனுதாரர்கள் பாஸ்போர்ட் உரிய நேரத்தில் பெறுவதில் அதிகமான கால தாமதம் ஏற்படுகிறது.
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனரகம் ஒரு புதிய திட்டத்தை நாட்டிலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இத்திட்டத்தின்படி, மனுதாரர்கள் குறித்து பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து வரும் விண்ணப்பங்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஐ.எஸ்., கான்ஸ்டபிளுக்கு இ-மெயில் மூலம் ஸ்கேன் செய்து அனுப்பப்படும். இதற்கு வசதியாக ஒவ்வொரு ஐ.எஸ்., கான்ஸ்டபிளுக்கும் ஒரு தனி ஐ.டி., கொடுக்கப்பட்டுள்ளது.
இன்டர்நெட் மையங்கள் மூலம் இ-மெயில் வழியாக விண்ணப்பங்களை பெறும் ஐ.எஸ்., கான்ஸ்டபிள், அன்றைய தினமே சம்பந்தப்பட்ட மனுதாரரின் முகவரிக்குச் சென்று, வெரிபிகேஷனை செய்வார். பின், அது குறித்த அறிக்கை மீண்டும் இ-மெயில் மூலம் கமிஷனர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.
இதையடுத்து போலீஸ் வெரிபிகேஷன் முடித்த விண்ணப்பங்கள் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இந்த புதிய முறையின் கீழ் ஓரிரு நாட்களில் போலீஸ் வெரிபிகேஷன் முடிக்கப்படும். இதன் மூலம் பாஸ்போர்ட் கேட்டு மனு செய்துள்ளவர்கள் விரைவாக பாஸ்போர்ட்டை பெறலாம்.
இப்புதிய திட்டத்தை சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் நவ., 5ம் தேதி துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ‘ சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நாள் ஒன்றுக்கு 150க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் போலீஸ் வெரிபிகேஷனுக்காக வருகின்றன. இதற்கு குறைந்தபட்சம் 15 நாட்கள் ஆகின்றன. இதை தவிர்க்கும் வகையில் இப்புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்காக ஒவ்வொரு ஐ.எஸ்., கான்ஸ்டபிளுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒருவார சோதனையில் இந்த திட்டம் வெற்றியடைந்துள்ளது’ என்றார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மண்டல பாஸ்போர்ட் அதிகாரி சுமதி ரவிச்சந்திரன் கூறுகையில், ‘சாதாரண பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு தற்போது, இரண்டு மாதங்களில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
தட்கலில் விண்ணப்பிப்பவர்களுக்கு, ‘பாஸ்போர்ட்’ தபால் மூலம் வெரிபிகேஷனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களில் 40 சதவீதம் பேர் தட்கல் முறையிலேயே விண்ணப்பிக்கின்றனர்.
அவர்களுக்கு பாஸ்போர்ட் கொடுத்தபின் வெரிபிகேஷன் வருவதால் பல்வேறு சிக்கல் எழுகின்றன. பாஸ்போர்ட் காலதாமதமாக கிடைப்பதற்கு போலீஸ் வெரிபிகேஷனும் ஒரு காரணமாக அமைகிறது. தற்போது, சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய திட்டம், ஒரு மாதத்திலேயே பாஸ்போர்ட் வழங்க உதவும். நாட்டிலேயே முதல் முறையாக இங்கு தான் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது மிகவும் வரவேற்கத்தக்க திட்டம். ‘பாஸ்போர்ட்’ வெரிபிகேஷன் முடித்தவுடன் சாதாரணமாக, ‘பாஸ்போர்ட்’ விண்ணப்பித்தவர்கள் தட்கல் முறையில் விண்ணப்பித்தால் மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைக்கும்’ என்றார்.
