அரசுப் பேருந்து திடீர் நிறுத்தம்: மாணவர்கள் பாதிப்பு
அரசுப் பேருந்து திடீர் நிறுத்தம்: மாணவர்கள் பாதிப்பு
UPDATED : மார் 20, 2013 12:00 AM
ADDED : மார் 20, 2013 02:32 PM
காஞ்சிபுரம்: தேர்வு நேரத்தில், கீழ் பெரணமநல்லூர் அரசு பேருந்து அடிக்கடி நிறுத்தப்படுவதால், அப்பகுதி மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் பள்ளி செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் - களக்காட்டூர் வழியாக, கீழ் பெரணமநல்லூர் கிராமம் வரை, அரசுப் பேருந்து (தடம் எண்: டி69) இயக்கப்படுகிறது. இப்பேருந்து காலை இரு முறை, காஞ்சிபுரத்தில் இருந்து களக்காட்டூர் வழியாக, கீழ்பெரணமநல்லூர் கிராமம் வரையும் மாலை காஞ்சிபுரத்தில் இருந்து வாலாஜாபாத் வழியாக, கீழ்பெரணமநல்லூர் வரையும் இயக்கப்படுகிறது. இப்பேருந்து காலையில் வருவதில்லை.
இதனால், காலூர், பெரியநத்தம், கொளத்தூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, மக்கள் களக்காட்டூர் கூட்டுசாலைக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. குறித்த நேரத்திற்குள் மாணவர்கள், பள்ளி செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதுகுறித்து கொளத்தூர் மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதிக்கு அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து இயக்கப்படுகிறது. மேல்புத்தூர் கிராமத்தில் இருந்து கீழ்பெரணமநல்லூர் வரை, சாலை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், அரசு பேருந்து அடிக்கடி நிறுத்தப்படுகிறது. காஞ்சிபுரத்தில் சென்று படிக்கும் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்" என்றனர்.
போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "கீழ்பெரணமநல்லூர் சாலை மிகவும் மோசமாக இருப்பதால், சில நேரங்களில் பேருந்து சேவை நிறுத்தப்பட்டிருக்கும். எனினும் பேருந்து சேவையை நிறுத்தாமல் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்,&'&' என்றார்.
