UPDATED : மார் 20, 2013 12:00 AM
ADDED : மார் 20, 2013 03:01 PM
காஞ்சிபுரம்: அஞ்சூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், அரைகுறையாக நிறுத்தப்பட்ட சுற்றுச்சுவர் பணியை, முழுமையாக முடிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
காஞ்சிபுரம் அடுத்த அஞ்சூரில், 1984ம் ஆண்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி கட்டப்பட்டது. இப்பள்ளியில், 12 மாணவியர் உட்பட, 27 பேர் படிக்கின்றனர். ஒரு தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் பணியாற்றுகின்றனர். பள்ளி வயல்வெளியையொட்டி அமைந்துள்ளது.
இப்பள்ளியில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், சுற்றுச்சுவர் கட்டும் பணி துவக்கப்பட்டது. திடீரென பணி பாதியில் நிறுத்தப்பட்டது. அதன்பின் பணி மேற்கொள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இரவு நேரத்தில் சமூக விரோதிகள் பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்க, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை நிறைவு செய்ய வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
