அரசின் அலட்சியத்தை கண்டித்து நூலகத்தை மூடி போராட முடிவு
அரசின் அலட்சியத்தை கண்டித்து நூலகத்தை மூடி போராட முடிவு
UPDATED : மார் 22, 2013 12:00 AM
ADDED : மார் 22, 2013 09:27 AM
கும்மிடிப்பூண்டி பேரூராட்சியின் மத்தியில், ஒன்றரை சென்ட் இடத்தில், 50 ஆண்டு கால பாழடைந்த கட்டடத்தில், தாலுகா நூலகம் இயங்கி வருகிறது. எந்த நேரத்திலும் விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ள, அந்த நூலகத்தில், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுடன், 5,000க்கும் மேற்பட்ட வாசகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
குறுகிய கட்டடம் என்பதால், ஏராளமான நூல்கள் மூட்டை கட்டி வைக்கப்பட்டு உள்ளன. நூலகத்தை சுற்றியுள்ள பகுதிகள் சத்திரம் வகை சார்ந்த நிலம் என்பதால், புதிய நூலக கட்டடம் நிறுவ, 10 சென்ட் இடம் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் திருவள்ளூர் மாவட்ட நூலகர் சார்பில், வழக்கு தொடரப்பட்டது. அதை ஏற்று உயர் நீதிமன்றம், நிலத்தை கையகப்படுத்த, வருவாய் துறைக்கு உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு துவக்கத்தில், வருவாய் துறையினரின் கையகப்படுத்தும் பணியில் ஏற்பட்ட குளறுபடியால், நான்கு சென்ட் மட்டுமே கிடைக்கப் பெற்றன. புதிய கட்டடம் நிறுவ அந்த இடம் போதாத நிலையில், இது நாள் வரை எந்த நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.
அரசின் போக்கை கண்டித்தும், உடனடியாக உயர் நீதிமன்ற உத்தரவின்படி, போதிய நிலத்தை கையகப்படுத்த வலியுறுத்தியும் வரும், 24ம் தேதி, வாசகர் வட்டம் சார்பில், நூலகத்தை இழுத்து மூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
