வேளாண் பல்கலை - அக்ரோ பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்
வேளாண் பல்கலை - அக்ரோ பயோடெக் நிறுவனம் ஒப்பந்தம்
UPDATED : நவ 07, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, கோட்டயத்திலுள்ள அக்ரோ-பயோடெக் ஆராய்ச்சி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாயின.
பல்கலை பதிவாளர் சந்தானகிருஷ்ணன், அக்ரோ பயோடெக் ஆராய்ச்சி நிறுவன நிர்வாக இயக்குனர் ஜேக்கப் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கேரளாவைச் சேர்ந்த அக்ரோ -பயோடெக் நிறுவனம், உயிர் உரம் மற்றும் உயிர்க் கொல்லிகள் உற்பத்தி செய்வதில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனம் கேரளாவிலுள்ள வளம் குறைந்த விவசாயிகளை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலை தொலைநிலைக்கல்வி மையத்துடன் இணைந்து சான்றிதழ் பாடங்களை வழங்க முன்வந்துள்ளது.
ஒப்பந்தத்தின்படி, உயிர் உரங்கள் மற்றும் உயிர்க்கொல்லிகள் தயாரிப்பு, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு, அங்கக வேளாண்மை, ரப்பர், தென்னை, காய்கறிகள், வாசனைப் பயிர்கள், நெல் உள்ளிட்ட பயிர்களுக்கான அடிப்படை மற்றும் நடைமுறை தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சான்றிதழ் பாடங்கள் வழங்கப்படவுள்ளன.
இவை ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் ஆறுமாத கால பாடங்களாக வழங்கப்படும். ஒரு பாடத்திற்கான கல்வி கட்டணம் 3,000 ரூபாய். உயிர் உரங்கள் மற்றும் உயிர்க்கொல்லிகள் தயாரிப்பு பாடத்தை படிக்க பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். பிற சான்றிதழ் பாடங்களுக்கு ஆறாம் வகுப்பில் தேர்ச்சி, மற்றும் மலையாள மொழியில் எழுத, படிக்க தெரிந்தவர்கள் சேரலாம்.
