விடைத்தாள் திருத்தும் பணி: இறந்த ஆசிரியருக்கு அழைப்பு
விடைத்தாள் திருத்தும் பணி: இறந்த ஆசிரியருக்கு அழைப்பு
UPDATED : மார் 26, 2013 12:00 AM
ADDED : மார் 26, 2013 08:20 AM
பிளஸ் 2 பொதுத் தேர்வு, கடந்த, 1ம் தேதி துவங்கி, நாளையுடன் முடிகிறது. இதுவரை முடிந்த, தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி, நேற்று, திருச்சி இ.ஆர்., மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது. வரும், 28ம் தேதி முதல், பிஷப் ஹீபர் பள்ளியில் விடைத்தாள்கள் திருத்தும் பணி துவங்கவுள்ளது.
விடைத்தாள் திருத்தும் பணிக்காக, திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும், முதுநிலை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலமாக, 500 முதல், 600 பேருக்கு, அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. இதில், இறந்த ஆசிரியர்களுக்கும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கும், பதவி உயர்வில் வெளியூர் சென்ற ஆசிரியர்களுக்கும், அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
திருச்சி தேசிய பள்ளியில் பணியாற்றி இறந்த, மாத்ருபூதம்; ஓய்வுபெற்ற ஆசிரியை, ஜோஸ்வா கலாராணி (ஹோலி கிராஸ்), தலைமையாசிரியை மரகதம் (அரசங்குடி அரசு பள்ளி), கோதண்டராமன் (இ.ஆர்.,); திருச்சி மாவட்டத்தில் இருந்து, தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று, புதுக்கோட்டை சென்ற, காந்திமதி ஆகியோருக்கு, கல்வி துறை சார்பில் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இது, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "கவனக்குறைவு காரணமாக இவ்வாறு நடந்து விட்டது" என்றனர்.
