வெளிநாட்டு படிப்பு சாதகமா பாதகமா: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்
வெளிநாட்டு படிப்பு சாதகமா பாதகமா: வழிகாட்டி நிகழ்ச்சியில் விளக்கம்
UPDATED : மார் 26, 2013 12:00 AM
ADDED : மார் 26, 2013 08:31 AM
தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "வெளிநாட்டில் மேற்படிப்புக்கான சாதக பாதகங்கள்" தொடர்பாக, சென்னையில் வெளிநாட்டு படிப்புக்கான மையம் நடத்தும் பால்செல்லக்குமார் பேசியதாவது:
தேசிய அளவிலான அங்கீகாரத்திற்கு, வெளிநாட்டு கல்வியின் பங்கு முக்கியம். மூன்று ஆண்டுகளாக, ஆண்டுதோறும் 2 லட்சம் மாணவர்கள், உயர் கல்விக்காக வெளிநாடு செல்கின்றனர். சீனாவுக்கு அடுத்து, இந்தியர்கள் தான் அதிகமாக, வெளிநாடு சென்று படிக்கின்றனர்.
கடந்த 1997ல், 90 சதவீத மாணவர்கள் "ஸ்காலர்ஷிப்பில்&' சென்றனர்; இப்போது சொந்த பணத்தில் செல்கின்றனர். இங்கு ஐ.ஏ.எஸ்., தேர்வை, 5 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர், மெயின் தேர்வுக்கு செல்கின்றனர். ஐ.ஐ.டி.,யில், 4.50 லட்சம் பேர் எழுதி, 2 சதவீதம் பேர் தேர்ச்சி பெறுகின்றனர்.
ஐ.ஐ.எம். கல்லூரியில் 2 லட்சம் பேர் எழுதி, 1.5 சதவீதம் மாணவர்களே தேர்ச்சி பெறுகின்றனர். ஜப்பானில், 4,000 பல்கலைகள் உள்ளன. அமெரிக்காவில் 3,700 பல்கலைகளும், சீனாவில் 2,500 பல்கலையும் உள்ளன. இந்தியாவில் 560 பல்கலைகளே உள்ளன.
மாணவர்களின் எண்ணிக்கைகு ஏற்ப இல்லை. வெளிநாடுகளில் இளங்கலை பட்டம் படிக்க, ஆண்டுக்கு குறைந்தபட்சம், ரூ. 5 லட்சம் முதல் ரூ.15 லட்சமும்; முதுகலை பட்டம் படிக்க, ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை செலவாகும்.
பிரான்ஸ், செக் குடியரசு, ஹங்கேரி போன்ற நாடுகளில், கல்விக் கட்டணங்கள் குறைவு. வெளி நாட்டுக் கல்விக்கு, ஆங்கில அறிவு முக்கியம், என்றார்.
"பயோ டெக்னாலஜி மற்றும் பயோ இன்ஜினியரிங்" படிப்புகள் குறித்து, சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன பல்கலை, பயோ டெக்னாலஜி துறை தலைவர் ரமா வைத்தியநாதன் பேசியது:
வேறுபட்ட சிந்தனையாளர்கள்தான், எதிர்காலத்தில் சிறந்தவர்களாக உருவாகின்றனர். ஒவ்வொரு மனிதருக்கும் எட்டுவிதமான திறமைகள் உள்ளன. மரபணுக்கள் தொடர்பாக இப்படிப்பானது, வேதியியல், டெக்ஸ்டைல்ஸ், லெதர், மருத்துவம், பொறியியல், உணவு பாதுகாப்பு போன்ற பல்வேறு துறைகளுக்கு அடிப்படையாக உள்ளது.
மனித மரபணுகளில் இருந்து இன்சுலில் தயாரிக்கப்பட்டதும், இத்துறை மூலம்தான். கடந்த 10 ஆண்டுகளில், இத்துறையின் வளர்ச்சி அபரிமிதம். பயோ டெக்னாலஜி ஆராய்ச்சியில், இந்தியா 12வது இடத்தில் உள்ளது. ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்தவரின் மரபணுக்களை வரிசைபடுத்தி, அவரது செயல்பாடுகளை ஆய்வு செய்ய முடியும், என்றார்.
"மொழிப் பாடங்களை தேர்வு செய்து நல்ல எதிர்காலம் அமைப்பது எப்படி" என, பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பேசியதாவது: படிப்பு என்பது வேலைவாய்ப்புக்காக மட்டும் இல்லாமல், சமுதாய மேம்பாட்டிற்காகவும் இருக்க வேண்டும்.
மாணவர்கள், உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. மொழிப் பாடங்களை தேர்வு செய்து, பி.எட்., படித்தால், ஆசிரியர்களாகவும், முதுகலையுடன் எம்.பில்., பிஎச்.டி., படித்தால் பேராசிரியர்களாகவும் பணியாற்றலாம். பிஎச்.டி., படிக்கும்போது, மாதம் ரூ.20 ஆயிரம், "ஸ்காலர்ஷிப்" கிடைக்கிறது.
இதுதவிர, ஊடகங்கள், சுற்றுலா, சினிமா போன்ற துறைகளில் வேலைகள் காத்திருக்கின்றன. கம்ப்யூட்டர் அறிவுடன், மொழித்திறனையும் வளர்த்துக் கொண்டால் அதிக வருவாய் ஈட்டலாம். எல்லோர் மனதிலும் ஒரு பிம்பம் உள்ளது; அதில் எது வலிமையானது என்று முடிவு செய்து அதை மட்டும் தேர்வு செய்யுங்கள். இதுதான் நமக்கு வாழ்க்கை என, தீர்மானித்து விட்டால் எதுவும் சுலபம்.
