UPDATED : நவ 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: சந்திரயான் -1 செயற்கைக்கோள் நவ., 8ம் தேதி மாலை 6 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையை அடையவுள்ளது.
நிலவிற்கு இந்தியா அனுப்பும் முதலாவது ஆளில்லா செயற்கைக்கோளான சந்திரயான்-1, பி.எஸ்.எல்.வி., - சி11 ராக்கெட் மூலம் அக்., 22ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைக்கோள் தற்போது பூமியின் சுற்றுப்பாதையில் சுற்றிவருகிறது.
செயற்கைக்கோள் பூமியை சுற்றிவரும் சுற்றுப்பாதையின் உயரம் ஐந்து முறை உயர்த்தப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் நவ., 9ம் தேதி நிலவின் சுற்றுப்பாதையை அடையவுள்ளது.
இதுகுறித்து, சந்திரயான் திட்ட இயக்குனர் அண்ணாதுரை கூறியதாவது:
சந்திரயான் செயற்கைக்கோள் 8ம் தேதி மாலை 6 மணிக்கு நிலவின் சுற்றுப்பாதையை எட்டும். நிலவிலிருந்து 500 கி.மீ., மற்றும் 7,500 கி.மீ., தொலைவிலான சுற்றுப்பாதையில் சுற்றவிடப்படும். அந்த சுற்றுப்பாதையில் சந்திரயான் செயற்கைக்கோள் சுற்றிவருவதை சில நாட்கள் கண்காணிக்க இருக்கிறோம்.
இந்த சுற்றுப்பாதையில் சந்திரயான்செயற்கைக்கோள் நிலவை சுற்றிவர 10 மணி 30 நிமிடங்கள் ஆகும். செயற்கைக்கோள் நான்கைந்து முறை இந்த சுற்றுப்பாதையில் சுற்றவுள்ளது. இதற்கு ஒன்றரை நாள் ஆகும். பின்னர் இந்த சுற்றுப்பாதையின் தூரம் படிப்படியாக குறைக்கப்படும்.
இறுதியாக நிலவிலிருந்து 100 கி.மீ., தொலைவிலான சுற்றுப்பாதையில் சந்திரயான் செயற்கைக்கோள் சுற்றவிடப்படும். செயற்கைக்கோளில் உள்ள எம்.ஐ.பி., கருவி வரும் 14 அல்லது 15ம் தேதி நிலவில் மோதி இறங்கும் சந்திரயான் செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதில் உள்ள அனைத்து கருவிகளின் செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளன. இவ்வாறு அண்ணாதுரை கூறினார்.
