சென்னையில் வழிகாட்டி நிகழ்ச்சி: நிரம்பி வழிந்தது மாணவர் கூட்டம்
சென்னையில் வழிகாட்டி நிகழ்ச்சி: நிரம்பி வழிந்தது மாணவர் கூட்டம்
UPDATED : ஏப் 06, 2013 12:00 AM
ADDED : ஏப் 06, 2013 09:42 AM
பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மேற்படிப்பை தேர்ந்தெடுப்பது குறித்த ஆலோசனை வழங்கும், "வழிகாட்டி" நிகழ்ச்சி, "தினமலர் நாளிதழ் சார்பில், ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மேற்படிப்பில் எந்த துறையை தேர்வு செய்வது, அதற்கான வேலை வாய்ப்பு எப்படி இருக்கும், எந்த கல்லூரியை தேர்வு செய்வது உள்ளிட்ட குழப்பங்களுக்கு, "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி விடையளிக்கிறது.
இந்தாண்டு வழிகாட்டி நிகழ்ச்சி, ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில், நேற்று துவங்கியது. நிகழ்ச்சியை, டாக்டர் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன தலைவர், ஏ.சி.எஸ்.அருண்குமார் குத்து விளக்கேற்றி, துவக்கி வைத்தார்.
"தினமலர்" வர்த்தக மேலாளர் ரா.லட்சுமிபதி, வரவேற்றார். முதல் நாளிலேயே, பெற்றோர், மாணவர்களின் கூட்டம் அலை மோதியது. கருத்தரங்கை துவக்கி வைத்து, பல்கலை துணைவேந்தர் மீர் முஸ்தபா உசேன் பேசியதாவது:
அரசு பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, உதவும் வகையில், "ஜெயித்துக் காட்டுவோம்" நிகழ்ச்சியும், பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், "வழிகாட்டி" என, மாணவர்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளை, "தினமலர்" நாளிதழ் நடத்தி வருகிறது.
18வது ஆண்டில், வெற்றிகரமாக அடியெடுத்து வைத்திருக்கும் "வழிகாட்டி" கல்வி திருவிழாவில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவியர் குவிந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படிப்பு, வேலைவாய்ப்புகளில், அதிகளவிலான வாய்ப்புகள், தற்போது குவிந்திருக்கின்றன. அதை சரியான முறையில், தேர்வு செய்வது உங்கள் கடமை. பெற்றோர், தங்கள் விருப்பங்களை, மாணவர்களிடம் திணிக்கக் கூடாது.
மாணவர்களின் விருப்பத்திற்கேற்ப, துறையை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், 90 வகையான உதவித் தொகைகளை வழங்குகின்றன. ஆனால், இது குறித்து, மாணவர்களும் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை. 10ம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள், பெரும்பாலானோர், அறிவியல் படிப்புகளையே தேர்ந்தெடுக்கின்றனர்.
வணிகம், வரலாறு படித்தாலும், அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளன என்பதை, மாணவர்கள் உணர வேண்டும். மாணவர்கள் தங்கள் லட்சியங்கள் நிறைவேற்றும் வகையில், கனவு காண வேண்டும். இவ்வாறு முஸ்தபா பேசினார்.
"தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சியில், தமிழகத்தை சேர்ந்த, 95 கல்வி நிறுவனங்கள், அரங்கங்களை அமைந்துள்ளன. தங்களிடம் உள்ள படிப்புகள், கல்லூரியின் தனித்தன்மை, கல்லூரி கட்டணங்கள் குறித்து, கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள், நேரடியாக விளக்கம் அளிக்கின்றனர்.
மாணவர்களும், பெற்றோரும் நேரடியாக, ஸ்டால்களை பார்வையிட்டு, தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம். காலை, 10:00 மணி முதல், இரவு, 7:00 மணி வரை, கண்காட்சி நடக்கிறது. இதை பார்வையிட, அனுமதி இலவசம்.
