தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"இலக்கை அடைய தீராத ஆசை தேவை"

"இலக்கை அடைய தீராத ஆசை தேவை"

"இலக்கை அடைய தீராத ஆசை தேவை"


UPDATED : ஏப் 08, 2013 12:00 AM

ADDED : ஏப் 08, 2013 08:59 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 08, 2013 12:00 AM ADDED : ஏப் 08, 2013 08:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: "தினமலர்" வழிகாட்டி நிகழ்ச்சி கருத்தரங்கில், சுகாதாரம், அறிவியல் இரண்டையும் இணைக்கும், "ஹெல்த் சயின்சஸ்" படிப்புகள் பற்றி டாக்டர் வைரமணி பேசியதாவது:

மருத்துவப் படிப்பு, மருத்துவ சார்ந்த படிப்பு, மருத்துவத்திற்கு உறுதுணையான படிப்பு என, வரிசைப்படுத்தலாம். தியாகம், சேவை மனப்பான்மை, கிராமத்தில் பணி புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவரே மருத்துவ படிப்பில் சேர வேண்டும்.

"ஹெல்த் சயின்சஸ்" படிப்பில், பல், பிசியோதெரபிஸ்ட், செவிலியர், பயோடெக்னாலஜி, மைக்ரோ பயாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, ஓட்டல் மேனேஜ்மென்ட், உடற்கல்வி என, உள்ளன. தற்போது, பிசியோதெரபிஸ்ட் படிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. செவிலியர் படிப்பு, பெண்களுக்கு மட்டும் தான் என, பலர் நினைக்கின்றனர். இந்த படிப்பை ஆண்களும் படிக்கலாம்.

அன்பு, அரவணைப்பு, சேவை மனப்பான்மை கொண்டர்வர்கள், செவிலியர் படிப்பை படிக்கலாம். ஆராய்ச்சி மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள், பயோடெக்னாலஜி படிப்பை தேர்ந்தெடுக்கலாம்.

விதவிதமான உணவு முறைகளை தயாரிக்க விருப்பம் உள்ளவர்கள், கேட்டரிங் டெக்னாலஜி படிப்பில் சேரலாம். வாழ்க்கையில் எதுவாக வேண்டும் என்பதை மாணவர்களே தீர்மானிக்க வேண்டும். இலக்கை அடைய வேண்டும் என்ற தீராத ஆசை, வெறி கொண்டவரே வாழ்வில் வெற்றி அடைய முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

கை நிறைய சம்பாதிக்கச் செய்யும் சி.ஏ., / ஏ.சி.எஸ்., / ஐ.சி.டபிள்யூ.ஏ., படிப்புகள் பற்றி ஆடிட்டர் சேகர் பேசியதாவது: காலத்தின் அருமை கருதி, கல்லூரி, பல்கலை, போட்டித் தேர்வு பற்றிய விவரங்கள், "தினமலர் வழிகாட்டி" மலரில் அச்சிடப்பட்டுள்ளது.

தனி ஒருவரால், இந்த தகவலை திரட்ட, ஒரு வாரமாகும். மாணவர்கள் நன்மை கருதி, தினமலர் இதை செய்துள்ளது பாராட்டுக்குரியது.பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் சூப்பர் மார்கெட் போல, "கல்விக்கான பல்பொருள் அங்காடி" வழிகாட்டி கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

எல்லா படிப்புகளும், நல்ல படிப்பு தான். வாழ்க்கையில், சுலபமானது என்று எதுவும் இல்லை. கஷ்டப்பட்டு உழைத்தால் மட்டுமே வெற்றியை அடைய முடியும்.மாணவர்கள், எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும், பயிற்சி செய்ய வேண்டும். உண்மையில், வணிகவியல் இல்லை என்றால் உலகமே இல்லை.

சி.ஏ., ஏ.சி.எஸ்., ஐ.சி.டபிள்யூ.ஏ., ஆகிய மூன்று படிப்புகளும், வணிகவியலின் மூன்று துறைகள்.பட்ஜெட் தயாரிப்புக்கு, வணிகவியல் படிப்பே முக்கியமானது. லாபமோ, நஷ்டமோ கணக்கு தேவை. அது, வணிகவியலில் உள்ளது. எந்த நெருக்கடி நிலையும், வணிகவியல் படிப்பை ஒன்று செய்ய முடியாது.

கடந்த ஆண்டு, அகில இந்திய அளவில், சி.ஏ., தேர்வில், சாதாரண ஆட்டோ ஓட்டுனரின் மகளான பிரேமா முதலிடம் பிடித்தார். இது, அவரின் முயற்சிக்கு கிடைத்த பரிசு. சி.ஏ., படிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால், வீட்டில் நாள்தோறும், ஐந்து மணி நேரம் பயிற்சி செய்ய வேண்டும்.

இந்தியாவில், சி.ஏ., படிப்புக்கான சிறந்த பயிற்சி நிலையங்கள், சென்னையில் அதிகம் உள்ளன. 21 வயதில், சி.ஏ., முடிக்கும் மாணவர், மாதத்திற்கு குறைந்தபட்சம், 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறலாம். தற்போது, இன்ஜினியரிங் படிப்புக்கு கூட இவ்வளவு சம்பளம் இல்லை.

பேஷன் டெக்னாலஜியின் எதிர்காலம் பற்றி யாமினி பேசியதாவது: உணவு, உடை, வீடு ஆகிய மூன்றும் வாழ்வில் இன்றியமையாதது. முடிவில்லாத துறை என்றால், அது பேஷன் டெக்னாலஜி தான். இந்த படிப்பில், பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன.

வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ள, பேஷன் டெக்னாலஜி படிப்பு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளது. ஜவுளி துறையில், ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. சென்னையில், 500 ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பணிபுரிவோர் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.

இந்தியாவில், சில்லரை வர்த்தகம் சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. அடுத்த ஏழு ஆண்டுகளில், சில்லரை வர்த்தக துறையின் வளர்ச்சி, 7 சதவீதம் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில், சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு, சேலம் நகரங்களிலும், பெங்களூரு, டில்லி, கோல்கட்டா, விசாகப்பட்டினம், மும்பை ஆகிய இடங்களில், அதிக ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.விருப்பம், புத்தாக்கம், படைப்பாற்றல் கொண்ட மாணவர்கள், பேஷன் டெக்னாலஜி படிப்பை தேர்ந்தெடுத்தால், வாழ்க்கையில் வெற்றி அடையலாம்.

மாணவர்கள், தங்களுக்கு வேண்டிய ஆடைகளையும், விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us