பள்ளி அருகில் மதுபான கிளப் பொதுமக்கள் தொடர் மறியல்
பள்ளி அருகில் மதுபான கிளப் பொதுமக்கள் தொடர் மறியல்
UPDATED : ஏப் 08, 2013 12:00 AM
ADDED : ஏப் 08, 2013 12:53 PM
தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், மதுபான வசதியுடன் கிளப் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் இரண்டு முறை மறியலில் ஈடுபட்டனர்.
தேவதானப்பட்டியில் இருந்து வைகை அணை செல்லும் வழியில், அரசு மேல்நிலைப்பள்ளி எதிரில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுபான வசதியுடன் ரூபி ரெக்ரியேஷன் கிளப் துவங்குவதற்கான பணிகள் நடந்தது. அப்போது, இப்பகுதியில் வாழும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கிளப் திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நேற்று மீண்டும் கிளப்பை திறப்பதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. கிளப்பை மையப்படுத்தி மேட்டுவளைவு, ஆசிரியர் குடியிருப்பு மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இருப்பதால், இப்பகுதியில் கிளப் திறப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று காலை 7 மணி முதல் 9 மணி வரை வைகை அணை செல்லும் ரோட்டில்,பெண்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர். இதனால் தேவதானப்பட்டியில் இருந்து, சில்வார்பட்டி வழியாக பெரியகுளத்திற்கு போக்குவரத்து தடைபட்டது.
பெரியகுளம் டி.எஸ்.பி., சேது, பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இதையடுத்து மறியலை கைவிட்டனர். இந்நிலையில், பகலில் கிளப் திறக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், மாலை 4 மணிக்கு பெரியகுளம்-வத்தலக்குண்டு மெயின் ரோட்டில், மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
டி.எஸ்.பி., சேது பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, மாவட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக கூறியதால், மாலை 5 மணிக்கு மறியலை கைவிட்டனர். ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
