அண்ணாமலைப் பல்கலை சிறப்பு அதிகாரி நடவடிக்கை: ஊழியர்கள் கலக்கம்
அண்ணாமலைப் பல்கலை சிறப்பு அதிகாரி நடவடிக்கை: ஊழியர்கள் கலக்கம்
UPDATED : ஏப் 09, 2013 12:00 AM
ADDED : ஏப் 09, 2013 08:10 AM
சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலையில், சிறப்பு அதிகாரியின் அதிரடி நடவடிக்கையால், ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இப்பல்கலையில், 15 ஆயிரம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். 12 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாதோர், பணியாற்றுகின்றனர். பல்கலைக்கழகத்தில், நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட குளறுபடிகளால், போராட்டங்கள் நடந்து, அதன் காரணமாக குழு நியமிக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தில் தணிக்கை செய்தது.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி, பல்கலையின் நிர்வாக சிறப்பு அதிகாரியாக, ஷிவ்தாஸ் மீனா நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 6ம் தேதி துணைவேந்தர் ராமநாதன், சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதற்கிடையே, பல்கலையின் ஆசிரியர்கள், ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் பட்டியல் மற்றும் அவர்களின் நியமனம் குறித்த பதிவேடுகளை பார்வைக்கு வைக்க வேண்டும் என, பதிவாளர் அலுவலகத்திற்கு, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில், பட்டியல் தயாரிப்புப் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.
அந்தப் பட்டியலின் படி பணி நியமனம், பதவி உயர்வு போன்றவற்றில், விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளதா, தகுதியுடையவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என, ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இது, பல்கலைக் கழக ஆசிரியர்கள், ஊழியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
