தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அனைத்து மாணவர்களுக்கும் 6 மதிப்பெண்: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

அனைத்து மாணவர்களுக்கும் 6 மதிப்பெண்: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்

அனைத்து மாணவர்களுக்கும் 6 மதிப்பெண்: விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் குழப்பம்


UPDATED : ஏப் 09, 2013 12:00 AM

ADDED : ஏப் 09, 2013 08:28 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 09, 2013 12:00 AM ADDED : ஏப் 09, 2013 08:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் நடந்த, பிளஸ் 2 தேர்வை,எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் எழுதினர். மார்ச், 14ம் தேதி நடந்த கணித தேர்வு, மிகவும் கடினமாக இருந்தது. படித்த பாடத்துக்கும், வினாத் தாளில் கேட்கப்பட்டதற்கும், சம்பந்தமில்லாத வகையில், கேள்வி இருந்ததாக புகார் எழுந்தது.

"புளூபிரின்ட்" அடிப்படையில் கேள்விகளை தேர்வு செய்யவில்லை என, மாணவர்கள், பெற்றோரிடையே அதிருப்தி நிலவியது. கணித பாடத்தில் மதிப்பெண் குறைந்தால், இன்ஜினியரிங், மருத்துவம் போன்றவற்றுக்கான சேர்க்கையில், "கட் ஆப்" மதிப்பெண் குறையும் என்ற அச்சமும் மாணவர்களிடையே ஏற்பட்டது.

"புளூபிரின்ட்"க்கு மாறாக, வினாத்தாள் தயாரித்துள்ளதாக, தேர்வுத்துறை மீது குற்றம்சாட்டி, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கணித தேர்வில், கடினமான கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால், மாணவர் ஒருவரும், மாணவி ஒருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தனர். இதை அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றத்தில், தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தும்பணி, பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது. கணித விடைத்தாள்கள் திருத்தும்பணி, ஓரிரு நாளில் முடிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 5ம் தேதி, விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்களிடம் கடிதம் ஒன்று வழங்கப்பட்டது. அதில், ஆறு மதிப்பெண் கொண்ட, 41வது கேள்விக்கு, பதில் சரியாக இருந்தாலும், இல்லையென்றாலும் மதிப்பெண் வழங்குமாறு கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, 80 சதவீத விடைத்தாள்கள் திருத்தி முடித்து, மதிப்பெண் வழங்கிய நிலையில், "41வது கேள்விக்கு, மதிப்பெண் வழங்குங்கள்" என்ற கடிதம், ஆசிரியர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள, ஆசிரியர்களுக்கான விடைக் குறிப்பில், "அணிகள் பாடத்தில் இருந்து இடம் பெற்றுள்ள, 41வது கேள்விக்கான விடை தவறுதலாக இடம் பெற்றுள்ளது. அதை திருத்திக் கொள்ளுங்கள்" எனக் குறிப்பிட்டு, வெள்ளிக்கிழமை மதியம், புதிய விடை ஒன்றை, தேர்வுத்துறை வழங்கி உள்ளது.

"அந்த வினாவுக்கான விடையை, 5 என்றோ அல்லது மைனஸ் 5 என்றோ யார் எழுதியிருந்தாலும், மதிப்பெண் வழங்குங்கள்" என, கூறப்பட்டுள்ளது. 80 சதவீதத்துக்கும் மேல் விடைத்தாள்களை திருத்தி, முடித்த நிலையில், இப்போது, மதிப்பெண்களை மாற்றுவது என்பது கடினம்.

அந்த மதிப்பெண் இனி அவ்வளவு தான். இனிமேல், திருத்தும் விடைத் தாள்களுக்கு, வேண்டுமானால் மதிப்பெண் போடலாம். தேர்வுத் துறை என்ன முடிவு எடுக்கப்போகிறது என, தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அரசு மேல்நிலைப் பள்ளி இணை இயக்குனர் தங்கமாரி, கையெப்பமிட்டு, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், இ- மெயில் அனுப்பப்பட்டது. அதில், "பிளஸ் 2 கணித பாடத்தில், 41வது கேள்விக்கு, ஆங்கில வழியில் கொடுத்தது போன்று, தமிழ் வழியிலும், மைனஸ் 5 என்ற எண்ணிற்குப் பதிலாக, 5 என, எடுத்து தீர்வு கண்டிருந்தாலும், மதிப்பெண் வழங்கப்பட வேண்டும்" என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவை, திருத்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்வுத்துறை உயர் அதிகாரிகள், எந்த திருத்தமும் செய்யுமாறு நாங்கள் கூறவில்லை என, மறுத்துள்ளது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us