பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.42.41 கோடி நஷ்டஈடு
பாரதியார் பல்கலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ரூ.42.41 கோடி நஷ்டஈடு
UPDATED : ஏப் 11, 2013 12:00 AM
ADDED : ஏப் 11, 2013 08:35 AM
பாரதியார் பல்கலைக்கு நிலம் கையகப்படுத்தியதற்கு, இழப்பீடு தொகை வழங்காததை கண்டித்து விவசாயிகள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கோவை சார்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில், 2007ல், விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பானது.
ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை. கோர்ட் உத்தரவுப்படி இழப்பீடு வழங்க கோரி, விவசாயிகள் போராட்டங்கள் நடத்தினர். கடந்த ஆண்டு பல்கலையையும், சமீபத்தில் கலெக்டரையும் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
இதையடுத்து, கடந்த 1ம் தேதி, எம்.பி., நடராஜன் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் தலைமையில் ஏராளமான விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால், அரசு தரப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, முதற்கட்ட இழப்பீட்டுத் தொகை கோர்ட்டில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.
கோவை கலெக்டர், கருணாகரன், கூறியதாவது: பாரதியார் பல்கலைகழகத்துக்காக, கடந்த 1982ம் ஆண்டு வடவள்ளி, சோமையம்பாளையம் பகுதியை சேர்ந்த 1375 விவசாயிகளிடம் இருந்து 994.01 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்தியது. அப்போதைய நில மதிப்புக்கு ஏற்ப, இழப்பீட்டு தொகையாக 92 லட்சத்து 71 ஆயிரத்து 201 ரூபாய் வழங்கப்பட்டது.
இழப்பீட்டு தொகை குறைவாக இருப்பதால், கூடுதல் இழப்பீடு கேட்டு, விவசாயிகள் சார்பில் கோர்ட்டில் 20 வழக்குகள் தொடரப்பட்டன. சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கையகப்படுத்திய நிலத்திற்கு, கூடுதல் இழப்பீடாக 202.24 கோடி ரூபாய் கேட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அதில், முதற்கட்ட இழப்பீட்டு தொகையாக 42.41 கோடி ரூபாய் வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இத்தொகை கோர்ட்டில் டெபாசிட் செய்யப்படும். கோர்ட் மூலம் விவசாயிகளின் வழக்கு நிலைக்கு ஏற்,ப பணம் பட்டுவாடா செய்யப்படும். வழக்கின் ஒவ்வொரு கட்டத்திலும், அரசு சார்பில் கோர்ட்டில் தொகை டெபாசிட் செய்யப்படும்.
பல்கலை., நிதிநிலையை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. அரசிடம் இருந்து இழப்பீட்டு தொகை திரும்ப பெறப்படும். பல்கலை.,க்கு நிலம் கொடுத்தவர்களின் வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்களில் 109 பேருக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், 35 பேருக்கு தினக்கூலி அடிப்படையில் வேலைவாய்ப்பும் வழங்கி, இதுவரை சம்பளம் மற்றும் தினக்கூலியாக 28.5 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, கலெக்டர் தெரிவித்தார்.
