தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் பாதிப்பு
தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால் மாணவர்கள் பாதிப்பு
UPDATED : ஏப் 11, 2013 12:00 AM
ADDED : ஏப் 11, 2013 10:18 AM
தேனி: தேனி மாவட்டத்தில் நடைபெறும் பொங்கல் விழாக்களில், அலறும் தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளால், தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில், பங்குனி பொங்கல் களை கட்டியுள்ளது. பொங்கல் விழாவையொட்டி, கிராமங்கள் தோறும் கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள், "ஸ்பீக்கர்கள்" கட்டி பாடல்கள், அறிவிப்புகள் செய்து வருகின்றனர். மின்தடை நேரங்களில் ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர். இந்த கூம்பு வடிவ ஒலி பெருக்கிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒலி பெருக்கிகளை தடையின்றி விழாக்கள் நடைபெறும் தெருக்கள் தோறும் கட்டி, பாடல்களை அதிக சப்தத்துடன் ஒலிபரப்புகின்றனர்.
"அதிக சப்தம், மெதுவான விஷம்" என்ற ஒரு ஆங்கில பழமொழிஉள்ளது. தொடர்ந்து அதிக சப்தத்துடன் ஒலிபரப்பப்படும் பாடல்களால், அந்த பகுதியில் வசிக்கும் முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பு தேர்வு பொதுத் தேர்வு, 6 முதல் 9 வரை உள்ள வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு நடக்கிறது. மாணவர்களின் ஓராண்டு படிப்பு, முழு ஆண்டு தேர்வில் தான் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த சூழலில் மாணவர்கள், கவனத்துடன் படிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
பொங்கல் விழாவுக்கு, சம்மந்தபட்ட நிர்வாகத்தினர் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், அனுமதி வாங்க வேண்டும். அனுமதி வழங்கிய போலீசார், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளுக்கு தடை விதிக்காதது ஏன்? என்ற காரணம் தெரியவில்லை. தேர்வு எழுதும் மாணவர்களின் நலன் கருதி, தடை செய்யப்பட்ட கூம்பு வடிவ ஒலி பெருக்கிகளுக்கு, கண்டிப்பான தடை விதிக்க வேண்டும். மேலும் ஒலி பெருக்கிகள், அதிக சப்தத்துடன் வைத்திருப்பதை குறைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
