UPDATED : ஏப் 12, 2013 12:00 AM
ADDED : ஏப் 12, 2013 07:03 AM
அச்சிறுப்பாக்கம்: களத்தூர் ஊராட்சியில், ஊராட்சி அலுவலகத்திற்கு கட்டடம் இல்லாததால், நூலக கட்டடத்தில், ஊராட்சி அலுவலகம் செயல்படுகிறது.
அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்டது களத்தூர் ஊராட்சி. இவ்வூராட்சியில் களத்தூர், காலனி, காட்டுக்கொள்ளைமேடு, அம்மாகொள்ளைமேடு, ஜெ.ஜெ.நகர், போன்ற பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் 450க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள திரவுபதியம்மன் கோவில் தெருவில், 20 ஆண்டுகளுக்கு முன் ஊராட்சி அலுவலகம் கட்டப்பட்டது. நாளடைவில் கட்டடம் முற்றிலும் பழுதடைந்து இடியும் நிலை ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து, சில ஆண்டுகளுக்கு முன், ஊராட்சி மன்ற அலுவலகம் அங்குள்ள நூலக கட்டடத்திற்கு மாற்றப்பட்டது. இங்கு ஊராட்சி தொடர்பான வேலைகள் நடைபெறுவதால், பொதுமக்கள் நூலகத்தை பயன்படுத்துவது சிரமமாக உள்ளது. நூலகம் வருவோர் ஊராட்சி தொடர்பான புத்தகங்களை எடுத்து செல்கின்றனர்.
இதை தவிர்க்க, ஊராட்சி அலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்ட, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, களத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பாட்டியான் கூறுகையில், "களத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என, எதிர்பார்க்கிறோம்" என்றார்.
