ஜெர்மனி பல்கலையில் ஆய்வு: நெல்லை மாணவர்களை அனுப்ப திட்டம்
ஜெர்மனி பல்கலையில் ஆய்வு: நெல்லை மாணவர்களை அனுப்ப திட்டம்
UPDATED : நவ 14, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
திருநெல்வேலி: நெல்லை அண்ணா பல்கலை மாணவர்கள் 8 பேர் ஜெர்மனி பல்கலையில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.
துணைவேந்தர் காளியப்பன் கூறியதாவது: ஜெர்மனி நாட்டின் அப்லைடு சயின்ஸ் பல்கலைக்கழகம் ரிமோட் சென்சிங் எனப்படும் தொலைஉணர்வு துறையில் ஆராய்ச்சியினை மேற்கொண்டுவருகிறது. பல்வேறு நாட்டு மாணவர்கள் அங்கு ஆராய்ச்சியினை மேற்கொள்கின்றனர்.
இந்தியாவை சேர்ந்த இரு மாணவர்கள் லைடார் லேசர் டெக்னாலஜியை பயன்படுத்தி வானில் இருந்து பூமியின் மலைகள், கட்டடங்களின் உயரத்தையும் கணக்கிடும் முறையிலும், வெப் இமேஜ் முறையிலும் சிறப்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் கடின <உழைப்பை மனதில் கொண்டு இந்தியாவில் இருந்து மேலும் மாணவர்களை ஆய்வில் ஈடுபடுத்த நெல்லை அண்ணா பல்கலையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளனர்.
இதன்படி நெல்லை அண்ணா பல்கலையில் கம்ப்யூட்டர் சயின்ஸ், சிவில் இன்ஜினியரிங்கில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியர்களில் 8 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு பி.இ.,க்கு பிறகு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக அடுத்த ஆண்டு ஜெர்மனிக்கு அனுப்பிவைக்க உள்ளோம். அங்கு ஒன்றரை ஆண்டுகள் தங்கி பயில்வார்கள். இதற்கான முழுசெலவையும் ஜெர்மனி பல்கலை ஏற்றுக்கொள்கிறது என்றார்.
நெல்லை வந்த ஜெர்மனி பல்கலை பேராசிரியர் டைட்ரிக் ஸ்ரோடர் இன்ஜினியரிங் மாணவர்களுடன் கலந்துபேசினார். நிகழ்ச்சியில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் ராஜகோபால் மற்றும் பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
