மருத்துவ கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு: அரசு டாக்டர்கள் சங்கம்
மருத்துவ கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு: அரசு டாக்டர்கள் சங்கம்
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
கோவை: ‘தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் டாக்டர்களுக்கு பதிலாக, எம்.எஸ்சி., படித்தவர்கள் ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை பணி நீக்கம் செய்து, டாக்டர்களை நியமிக்க வேண்டும்; இல்லாவிடில் டிச.,1 ல் மாநிலம் தழுவிய வகுப்பு புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும்’ என, தமிழக அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசு டாக்டர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம், கோவையில் நவ. 16ம் தேதி நடந்தது. மாநில தலைவர் டாக்டர் கனகசபாபதி தலைமை வகித்தார். மாநில செயலாளர் டாக்டர் செந்தில், பொருளாளர் டாக்டர் ஜெயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் கோவை கிளைச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர் வரவேற்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, மருத்துவக் கல்லூரிகளில் ஐந்தாண்டு பணியாற்றினால் பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்த விதியை மீறி ஆறு ஆண்டுகளாக அரசு அறிவித்ததை வாபஸ் பெற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் டாக்டர்களுக்கு பதிலாக, எம்.எஸ்சி., படித்தவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை வரும் டிச., 1 ம் தேதிக்குள் பணி நீக்கம் செய்து, ஆசிரியர்களாக டாக்டர்களையே நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடவடிக்கை இல்லையெனில், டிச., 1 முதல் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாநிலம் தழுவிய வகுப்பு புறக்கணிப்பு உள்ளிட்ட போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்படும் ஆகியவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
