சி.பி.சி.எஸ்., திட்ட குளறுபடிகளை தீர்க்க கோரிக்கை
சி.பி.சி.எஸ்., திட்ட குளறுபடிகளை தீர்க்க கோரிக்கை
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: ‘கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்’ என, தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நவ. 16ம் தேதி நடந்தது. கூட்டத்தில், அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் நியமனங்களுக்கான ஆணையம் அமைப்பதற்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோவை பி.எஸ்.ஜி., கல்லூரி மற்றும் மதுரை தியாகராஜர் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டத்தை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
சேலம் சவுடேஸ்வரி கல்லூரியை அரசு ஏற்று நடத்துவது தொடர்பாக தனி அதிகாரி ஒருவரை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும். ஈரோடு சிக்கைய நாயக்கர் கல்லூரியை சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் படி அரசு கல்லூரியாக அறிவித்து ஆசிரியர் நியமனங்களை நடத்த வேண்டும். கோவைப் பகுதி கல்லூரி கல்வி இணை இயக்குனரகத்தால் வழங்கப்படாத யு.ஜி.சி., ஊதிய நிலுவைத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சி.பி.சி.எஸ்., மதிப்பீட்டு திட்டம் அனைத்து கல்லூரிகளிலும் அமல்படுத்தப்பட்டதால், ஏற்பட்டுள்ள குளறுபடிகளை நீக்க தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் கூட்டு நடவடிக்கைக் குழுவை அழைத்துப் பேச வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்வாறு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
