‘குடும்ப மருந்தை உட்கொண்டால் நாம் திசை திரும்ப மாட்டோம்’
‘குடும்ப மருந்தை உட்கொண்டால் நாம் திசை திரும்ப மாட்டோம்’
UPDATED : நவ 17, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சென்னை: “இளைஞர்கள் பகுத்தறிவு, உணர்ச்சி இவற்றைப் பயன்படுத்த வேண்டிய இடங்களில் பயன்படுத்தி, நம்மைச் சார்ந்த குடும்பத்தை மனதில் எப்போதும் நினைத்தால் திசை மாறாமல் சாதிக்கலாம்,” என்று ரமேஷ் பிரபா பேசினார்.
‘தினமலர்’ நாளிதழ் சார்பில் சென்னைப் பல்கலையில் பிளஸ் 2 மாணவர்களுக்காக நடத்தப்பட்ட ‘ஜெயித்துக் காட்டுவோம்’ நிகழ்ச்சியில் தன்னம்பிக்கை குறித்து ரமேஷ் பிரபா பேசியதாவது:
வயதானவர்கள் அனைவரும் எங்கள் காலத்தில் எப்படி இருந்தோம் தெரியுமா? தற்போதுள்ளவர்கள் எப்படி இருக்கின்றனர் என்று அடிக்கடி கூறி வருகின்றனர். அது உண்மையில்லை. இந்த நிகழ்ச்சிக்காக அதிகாலை 4 மணிக்கு வந்து காத்திருந்தீர்களே அது தான் சிறந்தது. வாழ்க்கையைப் பற்றி அக்கறைப் படுபவர்கள் நாம் தான். பள்ளி, கல்லூரி படிப்பு முடித்து முன்னிலையில் வருபவர்களுக்குத் தான் உடனடியாக வேலை கிடைக்கும்.
நீங்களே சரியாக எழுதாமல் ஆசிரியர்களை குறை சொல்லி என்ன பயன். தமிழகத்தில் தற்போது பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 300ஐ நெருங்கி விட்டது. இதனால், பொறியியல் பிரிவில் அதிகப்படியான இடங்கள் உள்ளன. அதிக மதிப்பெண் எடுத்தால் விரும்பும் கல்லூரியில் விரும்பும் பாடப் பிரிவினைப் பெறலாம்.
கவுன்சிலிங்கில் புள்ளிகள் அடிப்படையில் கூட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இருப்பர். அதை நினைத்து தான் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பள்ளிப் படிப்பினை முடித்து விட்டு கல்லூரி செல்லும் போது கவனத்தை சிதறவிடக் கூடாது. புதிய தலைமுறையினர் ஊடகங்களால் திசை மாறி செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக மனிதனுக்கு பகுத்தறிவு, உணர்ச்சி என இரண்டு இருக்கும். இரண்டையும் எங்கெங்கு பயன்படுத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் மனம் திசை மாறிப் போகும் போது நம்மைச் சார்ந்த குடும்பத்தை நினைத்துக் கொள்ள வேண்டும். குடும்பம், குடும்பம் என்ற மருந்தை நாம் உட்கொண்டால் நாம் திசை திரும்ப மாட்டோம். இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.
