25 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை: ‘இன்போசிஸ்’ திட்டம்
25 ஆயிரம் பேருக்கு புதிதாக வேலை: ‘இன்போசிஸ்’ திட்டம்
UPDATED : நவ 18, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
புதுடில்லியில் நடந்த இந்திய பொருளாதார மாநாட்டில் பங்கேற்ற இன்போசிஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
நடப்பாண்டில் கம்பெனி வருவாயில், வட அமெரிக்காவில் இருந்து கிடைத்த பங்களிப்பு மட்டும் 68 சதவீதம்; ஐரோப்பாவில் இருந்து 28 சதவீதம் கிடைத்தது; மீதம் மற்ற நாடுகளில் இருந்து கிடைத்துள்ளது.
ஐந்தாண்டுகளுக்கு முன், வட அமெரிக்காவில் இருந்து மட்டும் 78 சதவீதத்திற்கு வர்த்தகம் கிடைத்தது. தற்போது, பிற நாடுகளில் இருந்தும் வர்த்தக ஆர்டர்களைப் பெறும் வகையில் புது திட்டங்களை வகுத்துள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்த தலா 40 சதவீதமும், உலகின் மற்ற நாடுகளில் இருந்து 20 சதவீதமும் வர்த்தக ஆர்டர்களை எதிர்பார்த்துள்ளது.
இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பு ஏற்றம் பெறுவதால், எங்களது மூன்றாவது காலாண்டு வருவாயில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கடந்த காலாண்டில் கம்பெனியின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க வகையில் இருந்தது. எங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கை கடந்த காலாண்டில் இருந்து 40க்கும் மேல் இருந்தது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.
தற்போதுள்ள சூழ்நிலையில் சற்று தொய்வு இருந்தாலும், நீண்ட கால நோக்கில் நல்ல முன்னேற்றம் இருக்கும். இந்த நிதியாண்டில் மேலும் 25 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு நியமிக்க இருக்கிறோம். இதில், 9 ஆயிரம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அடுத்த மார்ச் மாதத்திற்கு மேலும் 16 ஆயிரம் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு கிரிஸ் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
